இனவாதத்தை தோற்கடித்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக் கொள்ள எல்லோரும் இணைய வேண்டும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

லகில் இனவாதத்தை தோற்கடித்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக் கொள்ள எல்லோரும் இணைய வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த விடயத்தில் இன்னும் அதிகமாக சிரத்தை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

நாட்டில் தோன்றியுள்ள வெறுப்புணர்வு செயற்பாடுகளும் அதன் எதிர் வினையாற்றும் உத்வேகமும் பற்றிக் கேட்டபோது புதன்கிழமை (21.06.2017) அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்ளூ

ஒரு பூச்சரத்தில் பல மலர்கள் இணைக்கப்பட்டுள்ளதைப் போன்ற பல்லின கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் எண்ணிலடங்கா இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டமைந்த எளில் நாடு இலங்கை.

ஆயினும், பல்லின, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் அழகை ரசிக்கவும், இந்த நாட்டிலுள்ள மனித மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் தகுதியற்ற மதியீனர்களால் நாடு குழப்பப்படுகின்றது.

இந்த ஆரோக்கியமற்ற நிலைமையை மாற்ற எதிர்கால இளைஞர் சமூகம் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக மக்களும் ஒன்றிணைந்து சிறந்த முன்மாதிரியைக் காட்ட வேண்டும்.

உலகம் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு இந்த ஒற்றுமை அமையுமானால் இனவாதத்தால் ஏற்படப்போகும் இழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள வழியேற்படும். ஒற்றுமையே பலம் என்பதை உலகுக்கு உணர்த்திய சமூகங்களாக நாம் பாதை அமைக்க வேண்டும்.

அவ்வப்போது தூபமிடப்படும் இனவாத வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த நாட்டின் அனைத்து சமூகங்களினதும் அடுத்த சந்ததியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டை நேசிக்கின்ற சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கு உண்டு.

அதேவேளை இந்த நாட்டையும் இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் நாட்டு வளங்களையும் சட்டம் நீதியின் அடிப்படையில் பாதுகாக்கின்ற முழு முதற் கடமை பொலிஸாருக்கு உள்ளது.

சட்டம் ஒழுங்கு தடுமாறவும், பாரபட்சங்களால் சந்தேகங்கள் எழவும் பொலிஸார் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

மதஸ்தலங்கள், பெண்கள், சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளை கண்டும் காணாமலும் இருந்தால் குடிமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்.

இந்த நாட்டை பிளவுபடுத்தி அக்களை அச்சத்திலும் அமைதியின்மையிலும் வாழச் செய்து அழிவுகளை ஏற்படுத்தும் இனவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எவராவது முன்னெடுத்தால் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு உரிய தரப்பினரே பொறுப்பேற்க வேண்டிவரும்; என்பதை எவரும் மறந்து விடக் கூடாது.

மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆத்திரத்தையும் பகைமையும் வளர்த்து அதனூடாக தமது சதித்திட்டத்தை சாதிப்பதற்கு இனவாதிகள் கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

அதற்கு நாம் இடமளிக்காமல் மூவின மக்களும் மேலும் ஒற்றுமையாக இருந்து எமது சகோதரத்துவத்தைக் காட்ட வேண்டிய பொருத்தமான தருணம் இதுதான் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -