வடமாகாண சபை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாபஸ்

வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பம் நீடிப்பதற்குக் காரணமாகவுள்ள இரு அமைச்சர்களின் விடுமுறை விடயத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தளர்வுப்போக்கை வெளிக்காட்டியிருப்பதுடன், விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுவதற்கு ஆளுநருடன் கலந்துரையாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் கொண்டிருந்த இறுக்கமான நிலைப்பாட்டில் தளர்வை வெளிக்காட்டியிருப்பதால் கடந்த 14ஆம் திகதி முதல் வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பநிலை சுமுகமாக தீரும் நிலையை எட்டியுள்ளது.

விசாரணைகள் நடைபெறும் வரை ஒரு மாத காலத்துக்கு இரு அமைச்சர்களும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற தனது நிபந்தனையை வற்புறுத்தப் போவதில்லையென விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டுள்ள இரா.சம்பந்தன், சட்டபூர்வமானதும் தந்திரமானதுமான விசாரணைக்கும் இடையூறுவிளைவிக்ககூடாது இரண்டுஅமைச்சர்களுக்கும் தெரியப்படுத்துவதாகவும், நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வடமாகாண ஆளுநனருக்கு தொலைபேசிமூலம் அறிவித்திருப்பதாகவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

விரைவில் நேரில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் சம்பந்தன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோருக்கு எதிரான விசாரணைகளில் தலையிடமாட்டார்கள் என இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட ஆயர் ஆகிய மதத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய முதலமைச்சர் தனது நிலைப்பாட்டில் சற்றுத் தளர்வுப் போக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென்றும், அரசாங்கம் தம்மைப் பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லையென்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். நேற்றையதினம் காலை தம்மைச் சந்தித்த யாழ் மாறைமாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதீன குருமுதல்வர் ஆகியோரிடம் மாவை சேனாதிராஜா இதனைக் கூறியிருந்தார். முன்னதாக மதத் தலைவர்கள் இருவரும் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்திருந்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இரா.சம்பந்தனுக்கு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக எந்தத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் தமது சம்பளத்தைப் பெறுவதற்கோ, வாகனம் உள்ளிட்ட வசதிகளைப் பெறுவதற்கோ உரித்துடையவர்கள். சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் விசாரணைகள் முடியும்வரை விடுமுறையில் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.

இரு அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் உங்களால் உத்தரவாதம் வழங்க முடியாமை குறித்து நான் புரிந்துகொள்கின்றேன். சுயாதீனமான சட்ட விசாரணைகளை தடைசெய்யக்கூடாது என அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக நீங்கள் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். தடையற்ற விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தாலேயே அவர்களை ஒரு மாத விடுமுறையில் செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.

நீங்கள் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகும். இரு அமைச்சர்களும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். சட்டரீதியாக முன்னெடுக்கப்படக்கூடிய விசாரணைகளில் இரு அமைச்சர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை என்னை சந்தித்த இரு மதத் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

அது மாத்திரமன்றி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் தமிழ் மக்களின் நன்மை கருதி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியுள்ளனர். சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கோ, விசாரணை செயற்பாடுகளில் தலையிடுவதற்கோ அல்லது ஆதிக்கம் செலுத்துவதற்கோ அவர்கள் முயற்சிக்கக் கூடாது என்ற விடயத்தை அமைச்சர்களிடம் வலியுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான பின்னணியில் அவர்களின் இருவருடைய விடுமுறை தொடர்பான நிபந்தனையை இனியும் வலியுறுத்தப்போவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சரின் கடிதத்துக்கு உடனடியாக பதில் கடிதத்தை அனுப்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறுவிளைவிக்கக் கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் தான் தெரியப்படுத்துவதாகவும், நம்பிக்கை இல்லாப்பிரேரணை வாபஸ்பெறப்படும் என வடமாகாண ஆளுனருக்கு தொலைபேசிமூலம் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -