இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதனின் மறைவு தமிழ் ஒலிபரப்புத்துறையில் நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக பணியாற்றிய அவர், தமிழ் ஒலிபரப்புத்துறையின் பாரம்பரியத்தையும் தரத்தையும் கட்டிக்காப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய பெண்களில் இவர் மிகவும் பிரபலமானவராக கணிக்கப்படுகின்றார். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் ஒலிபரப்பாளராக அவர் இறுதிவரை திகழ்ந்தார். தனது குரல் வளத்தின் மூலமாகவும் தமிழ் மொழியாற்றல் மூலமாகவும் செய்தி மற்றும் நிகழ்ச்சி ஒலிபரப்பில் அவர் வரலாறு படைத்துள்ளார்.
மாத்திரமன்றி ஒலிபரப்புத் துறைக்குள் நுழையும் தமிழ், முஸ்லிம் அறிவிப்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை பலரும் இன்று நன்றியுடன் நினைவு கூருகின்றனர். அத்துடன் தனது அறிவு, ஆற்றல், அனுபவங்களைக் கொண்டு ஊடகத்துறைப் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் அவர் வழங்கி வந்தார்.
அந்த வகையில் ஊடகத்துறைக்கும் குறிப்பாக ஒலிபரப்புத் துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவையாகும். அவரது இழப்பால் துயருற்றிருக்கும்குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
என். எம். அமீன்,
தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்.