வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளினால் கோபமடைந்த அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் வடகொரியத் தீபகற்பத்தை நோக்கித் தனது போர்க்கப்பலை அனுப்பியிருக்கிறது. கொரிய தீபகற்பம் நோக்கி ‘தி கார்ல் வின்சன்’ (The Carl Vinson Strike Group) என்ற தாக்குதல் குழு விரைந்திருக்கிறது. இந்த கார்ல் வின்சன் தாக்குதல் குழுவில் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் பிற கப்பல்களும் இருக்கின்றன.
கடந்த 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் சக்தி மிக்க ஏவுகணை சோதனையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் மதிக்காமல், தனது நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் பொருட்படுத்தாமல் நான்கு முறை அணுகுண்டு சோதனையிலும், கடந்த ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி அணுகுண்டை விட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையிலும் வடகொரியா ஈடுபட்டு உலக அமைதிக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
வடகொரியாவின் இந்த மிலேச்சத்தனமான செயற்பாட்டினால் அதிகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பது தென்கொரியாவும் ஜப்பானும்தான். ஆயினும் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் வடகொரியாவின் செயற்பாடுகளைக் கண்டித்தே வந்திருக்கின்றன.
தற்போது அமெரிக்கா அனுப்பியிருக்கும் ‘தி கார்ல் வின்சன்’ தாக்குதல் குழு வடகொரியாவில் எவ்விதஅச்சத்தையும் தோற்றுவிக்கவில்லை. மாறாக, ''போருக்கு வருகிறாயா...? நாங்கள் தயாராகவே இருக்கிறோம்!'' என்ற பாணியிலேயே வடகொரியா பதிலளித்திருக்கிறது.
''அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் தீப கற்ப பகுதியை நோக்கி போர்க்கப்பலை அனுப்பியிருப்பது மிகவும் தீவிரமான கட்டமொன்று ஏற்படப் போவதைக் காட்டுகின்றது. எங்களது பிராந்தியத்தில் மேலும் பதட்டம் அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டால் போருக்கு வடகொரியா தயாராகவே உள்ளது” என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்.ஹமீத்.