அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த வேலையில்லாப்பட்டதாரிகள் திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளையை பொலிஸாரிடம் பெற்று கிழித்து காலால் மிதித்தமையை கண்டித்து இன்று (28) திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த வேலையில்லாப்பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழம பிரதான கதவுகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவ்வேளை திருகோணமலை தலைமையக பொலிஸார் இவ்வார்ப்பாட்டத்தின் போது போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் இடம் பெறலாம் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு வழங்குமாறு நீதிமன்றை கோரினர்.
அக்கோரிக்கையை விசாரித்த திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா அமைதியான முறையிலும் பொது சொத்துக்க்ளுக்கு சேதம் ஏற்படாத வகையிலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு ஆர்பாட்டத்தை தலைமை தாங்குபவர்களுக்கு கட்டளையொன்றினை பிறப்பித்தார்.அக்கட்டளையை வழங்கிய பொலிஸார் அதனை பெற்றுக்கொண்ட வேலையில்லாப்பட்டதாரிகள் பொலிஸாருக்கு முன்பே கட்ளையை கிழித்து காலுக்கு கீழே போட்டு நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்தனர்.
அக்கட்டளையை உதாசீனம் செய்தவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தே இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.இதில் கலந்து கொண்டு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில் நீதிமன்ற கட்டளையை பொலிஸாருக்கு முன்னே கிழித்தெரிந்ததாகவும் இச்சம்பவமானது பொலிஸார் முன்னிலையிலே நடைபெற்றிருக்கின்ற காரணத்தினால் பொலிஸார் அது சம்பந்தமாக போதிமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததும் கண்டிக்கதக்க பாரதூரமான விடயமாகும்.
இந்த சந்தர்ப்பத்திலேயே வேலையில்லாப்பட்டதாரிகளை மட்டுமல்ல பொலிஸாரையும் கண்டிப்பதாகவும் சட்டத்மதரணிகள் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் முன்னிலையில் பாரிய குற்றம் நிகழ்ந்திருக்கின்ற வேளையில் அவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸாருக்கு இருந்தும் அதனை செய்யாமல் வெறுமனே ஒரு அறிக்கையை இந்த நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சந்தேக நபர்களுக்கு அழைப்புக்கட்டளை விடுக்குமாறு வேண்டியிருப்பதானது பொலிஸார் தரப்பில் செய்யப்பட்ட மாபெரிய சட்டவிரோதமான சட்டத்தை அவமானப்படுத்துகின்ற செயற்பாடாகும் எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.