1987ம் ஆண்டு கல்குடா ஓட்டமாவடி பிரதேச சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியின்றி (un contest) தெரிவான முதலாவது பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தருமான அஷ்ஷஹீட் புஹாரி விதானையார் 1988ம் ஆண்டு விடுதலை புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஜனாஸா கூட கையளிக்கப்படாத வரலாறு ஓட்டமாவடி பிரதேசத்திற்கு இருக்கின்றது.
அதே போன்று ஏறாவூரின் கல்விமானாகவும், அலிகார் தேசிய பாடசாலையின் அதிபராகவும், ஏறாவூர் பிரதேசத்தில் வாழ்ந்த தன்மானமிக்க ஒரு இரும்பு மனிதனாகவும் காணப்பட்ட அஷ்ஷஹீட் தாவூத் மாஸ்ட்டர் எனப்படும் அதிபரும் 1990ம் புஹாரி விதானையை போன்றே விடுதலை புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஜனாஸா உறவினர்களிடத்தில் கையளிக்கப்படாத சோக வரலாறு ஏறாவூர் பிரதேசத்திற்கும் இருக்கின்றது.
இவர்கள் இருவர்களினதும் நினைவாக ஏறாவூர் பிரதேசத்தில் நான்கரை தசாப்த காலமாக விளையாட்டு துறையில் மட்டு மல்லாது கல்வி, கலை கலாச்சரம், சமூக சேவை, அரசியல் என பல துறைகளிலும் தாக்கம் செலுத்தும் இளம் தாரகை விளையாட்டு கழகமானது (YSSC Young Strar Sports Club) கிழக்கு மாகாணம் தழுவிய அஷ்ஷஹீட் புஹாரி விதானையார் & தாவூத் மாஸ்ட்டர் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியினை வருகின்ற ஏப்ரல் மாதம் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாகவும், வரலாற்று பதிவாகவும் இடம் பெற உள்ள இச் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள முக்கிய 32 விளையாட்டு கழகங்கள் பலப்பரீட்ச்சையில் பங்குபற்ற உள்ளன. அத்தோடு வெற்றியீட்டும் கழகங்களுக்கு பெருமதி மிக்க பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளன என்பது சுற்றுப்போட்டியின் சிறப்பம்சமாக உள்ளது.
வரலாறு படைக்கவிருக்கும் அஷ்ஷஹீட் புஹாரி விதானையார் & தாவூத் மாஸ்ட்டர் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான பூரண அனுசரணையினை ஓட்டமாவடியில் உள்ள சமூக ஆர்வலரும் முன்னாள் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுற்றுப்போட்டி சம்பந்தமாக ஏறாவூர் YSSC விளையாட்டு கழக நிருவாகமும் அனுசரணையாளர் சாட்டோ மன்சூருக்கும் இடையிலான போட்டி சம்பந்தமாக முன்னோக்கி பயணிக்க வேண்டிய கலந்துரையாடல்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.