சமூக ஆய்வாளர் மொஹிதீனுக்கு கலாநிதி பட்டம் கொடுத்து கௌரவிக்க வேண்டும்..!

அஷ்-ஷெய்க் கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
சென்ற வாரம் கொழும்பு நோரிஸ் கெனாலில் வசிக்கும் அக்கறைப்பற்றைச் சேர்ந்த எம் ஐ எம் மொஹிதீன் சார் அவர்களை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றேன். கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றை 1980 களின் ஆரம்பத்தில் தோற்றுவித்து வடகிழக்கு முஸ்லிம்கள் குறித்த ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு அரசியல் முன்னெடுப்புக்களிலும் முன்னோடியாக ஈடுபட்டவர்.

இந்தியாவில் விடுதலைப் புலிகளுடன் இடம் பெற்ற திம்பு பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றியவர், முஸ்லிம் அரசியல் சித்தாந்தங்களை எழுதியவர், மாகணங்களிற்கு அதிகாரங்கள் பகிறப்படுவதை ,முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தை முன்மொழிந்தவர். கலாநிதி பதியுதீன், டாக்டர் கலீல் போன்ற பல பிரபலங்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம் கவுன்சிலை ஸ்தாபித்து ஜெ ஆர் ஜெயவர்த்தனா அமைத்த வட்ட மேசை மாநாடுகளில் பங்களிப்புச் செய்தவர். இவர் பற்றி புதிய தலைமுறையினர் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள்.

இலங்கை முஸ்லிம்களது விவகாரங்களை ஆய்வுகள் செய்து ஆவணப் படுத்தியுள்ளவர், அரசியல் தீர்வுகள் குறித்த நகர்வுகளில் முஸ்லிம் சமூகம் சார் கோரிக்கைகளை தரவுகளோடு ஆய்வு செய்து வைத்திருப்பவர். வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களது புள்ளிவிபரங்கள், தரவுகள், கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், இழப்புக்கள், காணி அபகரிப்புக்கள், தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள், இழப்புக்கள், இவ்வாறு இன்னோரன்ன பரப்புக்களில் அவரது ஆய்வுகள் இடம் பெற்றிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பு தேர்தல் முறை சீர்திருத்தம், உள்ளூராட்சி எல்லைகள் மீள்நிர்ணயம் போன்ற விடயங்களில் ஆர்வத்தை வெளிப்படுத்தி பல செயலமர்வுகளில் பங்கு கொண்டவர். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நான் சந்தித்துள்ளேன், குறிப்பாக தேசிய ஷூரா சபை நடத்திய சில அரசியல் கலந்துரையாடல்களில் அவரை அழைத்து வந்து பங்குபற்றச் செய்துள்ளேன்.

தற்பொழுது உடல் நல குறைவு காரணமாக தனது வீட்டில் உள்ள காரியாளயத்துடன் பணிகளை மட்டுப் படுத்திக் கொண்டுள்ளார். அவரிடம் அரிய ஆய்வுகள், ஆவணங்கள் இருக்கின்றன, எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியிலும் இல்லாத ஆவணங்கள் அவை, சமூகம் அவரை கௌரவிக்க வேண்டும். அவரது ஆய்வுப் பணிகள், ஆவணங்கள், அவர் சேகரித்துள்ள தரவுகள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், வரைவுகள் காலத்திற்கு மிகவும் அவசியமானவை, அவற்றை தென்கிழக்கு பல்கலைக் கழகம் பெற்று பாது காப்பத்தோடு அவருக்கு கௌரவக் கலாநிதி பட்டம் ஒன்றை வழங்க வேண்டும் என சிபாரிசு செய்கின்றேன்.

அவர் தனி ஒரு நிறுவனம் போல் இந்த சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் குறித்து மேற்கொண்டுள்ள ஆய்வுகளை இன்னும் 10 கலாநிதிகள் அல்லது பேராசிரியர்கள் இருந்தாலும் செய்திருக்க மாட்டார்கள், செய்தும் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். மறைந்த தலைவருடன் அவருக்கு இருந்த உறவு, தென்கிழக்கு பல்கலைக் கழக உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு என அவரது பணிகள் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியலின் அரிச்சுவடி தெரியாதவர்களையெல்லாம் அரங்கேற்றி அழகு பார்க்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத் தலைமைகள் அவரை சென்று காணுங்கள்.

அவரது ஆரோக்கியத்திற்காகவும், ஈருலக ஈடேற்றத்திற்காகவும் துஆ செய்யுங்கள், சமூகத்தில் இலை மறை காய்களாக இருக்கும் முத்துக்களை முதிசங்களை இனம் காணுங்கள், வாழும் பொழுதே அவர்களை வாழ்த்துங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -