மன்னார் முசலிப் பிரதேசத்தை பாதுகாப்பு வனப் பிரதேசமாக, ஜனாதிபதி மைத்திரி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக, அந்த பகுதி மக்கள் மட்டுமல்ல மற்றபகுதி முஸ்லிம் மக்களும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இந்த விடயத்தில் அமைச்சர் ரிசாட் பதுர்தீன் அவர்கள் கடுமையாக பாடுபட்டுக்கொண்டு வருகின்றார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
அவருடைய இந்த செயல்பாட்டை அரசியல் சாயம் பூசி முஸ்லிம்களின் ஒரு பகுதியார் கடுமையாக விமர்சித்து வருவதையும் காண்கின்றோம். அப்படி விமர்சிக்கும் அந்த கட்சிக்காரர்கள் தாங்களாவது இந்த விடயத்தில் தலையிட்டு, இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சிக்கின்றார்களா என்று பார்த்தால், அவர்கள் "அந்தப் பழம் புளிக்கும்" என்பது போல் ஒதிங்கி நிற்பதையே காண்கின்றோம்.
இவர்களுடை அரசியல் சித்து விளையாட்டின் மூலம் பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம்தான் என்பதை இவர்கள் சிந்திக்க தவறிவிடுகின்றார்கள். அதே நேரம் இவர்களின் பிரிவினையை பயன்படுத்தி, எதிரிகள் முஸ்லிம்களின் உரிமைகளை வெறுமையாக்குகின்றார்கள் என்பதை இவர்கள் கவணத்தில் எடுக்கத் தவறிவிடுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
இருந்தாலும், அமைச்சர் ரிசாட் பதுர்தீன் அவர்கள் இந்த விடயத்தில் நான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும், இந்த விடயமாக முஸ்லிம் புத்திஜீவிகளிடமும், உலமா சபையிடமும் கலந்தாலோசனை செய்துவிட்டு, ஜனாதிபதியிடமும், பிரதமிரிடமும் இந்த விடயத்தை எடுத்துக்கூறி, ஜனாதிபதி அவர்களினால் பிரகடணப்படுத்தப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலை வாபஸ் பெறமுயற்சிப்போம் என்று, லண்டன் பி.பி.சி.தமிழ் ஓசைக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்படி முடியாது விட்டால் பாராளுமன்றத்தில் பேசி தீர்வை பெற முயற்சிப்போம் அங்கும் முடியாது விட்டால் சர்வதேசத்திடம் கொண்டு செல்வோம் என்று உறுதிபட கூறியுள்ளார். அவருடைய இந்த நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் சமூகம் நிச்சயமாக ஆதரவு அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அவருடைய இந்த போராட்டம் உளத்தூய்மையாக இருக்குமேயானால் நிச்சயமாக இறைவன் அவருக்கு உதவி செய்வான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
முஸ்லிம் சமூகத்துக்கு இதுமட்டுமல்ல பிரச்சினை, இன்னும் ஏறாலமான பிரச்சினைகள் உண்டு, அதனையெல்லாம் பகிரங்கப்படுத்தி ஜனநாயக ரீதியில் போராடி பெறுவதற்கு இவர்கள் சில தியாகங்களை செய்யவேண்டும். மாறாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் ஆசைப்பட்டு இப்படியான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு இவர்கள் முயற்சிக்கவில்லையானால், நிச்சயமாக நமது சமூகம் இதை விட மோசமாக எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்பதில் எள்ளலவும் சந்தேகமே இல்லையெனலாம்.
ஆகவே, கட்சி பேதங்களை மறந்து அல்லாஹ்வுக்காக எல்லோரும் ஒன்று பட்டு செயல் பட முன்வர வேண்டும், அப்படி அவர்கள் முன்வராது விட்டால் முஸ்லிம் சமூகம் அநாதைகள் போன்று அள்ளல் படும் நிலைகண்டு ரத்தக் கண்ணீர் வடிப்பதை தவிர வேறொன்றும் செய்யமுடியாது. சிறுபாண்மை சமூகமான தமிழர்களின் பிரச்சினை இன்று ஐ.நா.சபைவரை சென்று இலங்கை அரசாங்கத்தை நாறடிக்கின்றது, அதே போன்று நாமும் அற்ப சுகங்களை தூக்கியெறிந்து விட்டு, நமது பிரச்சினைகளையும் சர்வதேசத்திடம் கொண்டு சென்றால், சிங்கள அரசாங்கம் நமது காலடியில் விழும் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் கொள்ளத்தேவையில்லை.
காரணம், தமிழர்களைப்போல் முஸ்லிம்களும் சிங்கள அரசாங்கத்தின் மேல் வெறுப்புற்று நடந்தால்., நிச்சயமாக சிங்கள அரசாங்கம் வெளிநாடுகளின் முன் தலை குனிவை சந்திக்கும் நிலையேற்படும். அதன் காரணமாக அவர்கள் எம்மையும் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
ஆகவே நீங்கள் சில தியாகங்களை செய்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க பாடுபட வேண்டும் என்பதே எங்களின் அவாவாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.