வடக்குடன் கிழக்கை இணைக்கவேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி ஞாபகபடுத்தி பேசுவதற்கு காரணம் என்ன என்பதை முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.
தமிழர்களின் போராட்டம் நியாயபூர்வமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது, அவர்களின் உரிமை போராட்ட வடிவத்தில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் குறுக்கிடும் பிரச்சினை ஒன்று உண்டு என்றால், அது வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான விடயம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. மற்ற விடயங்களில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் எந்த வித குறுக்கீடுகளும் பெரிதாக கிடையாது என்பதே உண்மையாகும்.
தமிழர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமாக வைக்கப்படும் தாய்க்கோரிக்கை என்னவென்றால், வடக்குடன் கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைதான் என்பதை எல்லோரும் அறிவார்கள். காரணம் அது இணைக்கப்பட்டால்தான் அவர்களின் மற்ற கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அது ஏதுவாக அமையும் என்பதனாலாகும்.
அவர்கள் வடக்குடன் கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்பதன் காரணம் தங்களுடைய அரசியல் பலத்தை கூட்டுவதற்கேயாகும் என்பதுவே வெள்ளிடைமழையாகும். அதே நேரம், கிழக்கிலே 34 சதவிகிதத்தை பெற்று ஓரளவு அரசியல் பலத்தோடு இருக்கின்ற முஸ்லிம் சமூகம், இந்த இணைப்பின் மூலம் இரவோடு இரவாக இணைந்த வடக்கு கிழக்கிலே 17 சதவிகிதமாக மாற்றப்படுகின்றார்கள், இதன் காரணமாக வடக்கு கிழக்கில் தேர்தல் நடந்தால் முஸ்லிம்கள் ஆளும் கட்சியாகவும் வரமுடியாது, எதிர்க்கட்சியாகவும் வரமுடியாது, அதேநேரம் முஸ்லிம்களின் அரசியல் பலம் நிர்மூலமாக்கப்பட்டுவிடும் என்ற என்னமே முஸ்லிம்களிடம் குடிகொண்டுள்ள அச்சமாகும்.
இணைக்கப்படாத கிழக்குமாகாணத்தில் ஒரு தேர்தல் நடந்தால் ஆட்சியை தீர்மானிப்பதில் முஸ்லிம்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும், அதனால் அவர்களின் பேரம்பேசும் சக்தி உயிர்ப்பெற்று, அது அவர்களின் அரசியல் அபிலாசைகளை இலேசாக நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக அமையும் என்பதே உண்மையாகும். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு தங்கள் என்னம் மட்டும் நிறைவேறினால் போதும் என்று தமிழ்சமூக தலைவர்கள் வடகிழக்கை இணைப்பதற்கு போராடிவந்த நேரத்தில்தான், 1987ம் ஆண்டு முஸ்லிம்களின் என்னத்தில் மண்ணைத்தூவிவிட்டு, ஜே.ஆர் அவர்களும், ரஜீப்காந்தி அவர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தற்காலிகமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொடுத்தார்கள்.
அந்த இணைப்பை அன்றிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் தடுக்கமுடியவில்லை, அவர்கள் பேசா மடந்தைகளாக இருந்துவிட்டார்கள் என்று கூறி, அன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது தன் தாயை விற்பதற்கு சமமான செயல் என்று பல கூட்டங்களில் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் பேசியிருந்தார், அது மட்டுமல்ல இந்த ஒப்பந்தத்தை எச்சந்தர்ப்பத்திலும் எக்காரணம் கொண்டும் முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்காது என்றும் திட்டவட்டமாக அறிவித்தும் இருந்தார்.
அந்த நேரம் முஸ்லிம்களின் மனவேதனையை அன்று தமிழ்தலைவர்கள் கண்டும் காணாதவர்கள்போல் இருந்து விட்டார்கள், காரணம் அவர்கள் நினைத்த விடயம் நடந்து விட்டது என்பதனால். அதன் பிற்பாடு தமிழ் தலைவர்கள் எந்த பேச்சுவார்த்தையானாலும் முஸ்லிம் தறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்தே வந்தனர், ஏனென்றால் முஸ்லிம்களிடம் கேட்பதற்கு அங்கே ஒன்றுமே இல்லை என்பதால்.
இப்படியான நிலையில்தான் முஸ்லிம்களின் நம்பிக்கை நட்ச்சத்திரமாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ், எந்தவித காரணத்தையும் சொல்லாம் திடீரென தனது கொள்கையை மாற்றி வடக்கு கிழக்கு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு 1989ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபைதேர்தலில் போட்டியிட்டது.
அந்த தேர்தலில் போட்டியிட்டதனால் என்ன நண்மை கிடைத்தது என்று இது வரை முஸ்லிம் சமூகத்துக்கு எத்திவைக்கப்படவில்லை, ஆனால் அந்த தேர்தலில் போட்டியிட்டதனால் ஒப்பந்தத்தை மானசீகமாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அந்த ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட விடயத்தையும் ஏற்றுக்கொண்ட விடயமாகும்.
அதன் பிற்பாடு இணைந்த மாகாணசபையில் அதைத்தாருங்கள் இதைத்தாருங்கள் என்று முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கதரிக்கொண்டு திறிந்தார்கள், அந்த கதரலை தமிழ் சமூக தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள அரச தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
காரணம் அவர்களுடை தேவை நிறைவேற நாமே காரணமாக இருந்ததனால் ஆகும். ஒருவேளை அந்த தேர்தலை முஸ்லிம்களின் குரலாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்து இருந்தால் அந்த தேர்தல் ஜனநாயக தேர்தலாக இருந்திருக்காது, அந்த ஒப்பந்தமும் முஸ்லிம்களினால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒப்பந்தமாகவே கடைசிவரையும் இருந்திருக்கும்.
அதன் காரணமாக இந்த ஒப்பந்தம் முழுவதுமாக செயல்படுவதாக இருந்தால் முஸ்லிம்களின் பங்களிப்பும் தேவைபடும், அதனால் பின்னால் வந்த அத்தனை பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை அங்கே எல்லா தரப்பினர்களுக்கும் உணர்த்தியிருக்கும். அந்த சந்தர்ப்பம் இவர்களின் செயல்பாட்டால் கைநலுவி போனது என்பதே கசப்பான உண்மையாகும்.
அதன் பிற்பாடு ஏதோ ஒரு வகையில் 2006ம் ஆண்டு ஜே.வி.பியினரின் ஒரு வழக்கின் மூலம் வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிக்கப்பட்டது, அதற்கு அன்றய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பச்சை கொடி காட்டினார் என்பதும், அதற்கு தூண்டுகோலாக அதாவுல்லா அவர்கள் பின்னால் இருந்தார் என்பதும் வரலாறாக இருக்கின்றது. வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிக்கப்பட்டதன் பின் தான், தமிழ் தலைவர்கள் திரும்பவும் சட்டப்படி வடக்கையும் கிழக்கையும் இணைப்பது என்றால் முஸ்லிம்களை அரவணைத்து செல்வது மட்டுமல்ல அவர்களின் கதரலையும் செவி மடுத்து அதற்கு தீர்வும் வழங்கவேண்டும் என்ற ஞானம் அவர்களுக்கு பிறந்திருக்கின்றது. இந்த ஞானம் வடக்கும் கிழக்கும் இணைந்திருந்திருந்தால் அவர்களுக்கு புரிந்திருக்கமா என்பதை முஸ்லிம் சமூகம் தெறிந்து கொள்ளவேண்டும்.
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் போது முஸ்லிம் சமூகத்தை மூன்றாம் தரப்பாககூட வருவதற்கு அனுமதிக்காத தமிழ் சமூக தலைவர்கள் இன்று வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் போது முஸ்லிம்களை நிராகரிக்க முடியாத நிலையில், நம்மோடு பேசுவதற்கும், உரிமை என்னவேண்டும் என்று கேட்பதற்கும், அதை தருகிறோம் இதை தருகிறோம் என்று எம்மை மதித்து பேசுவோம் வாருங்கள் என்று அழைப்பதற்கும் என்ன காரணம் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளாது விட்டால் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கமுடியாது.
ஆகவே, இறைவன் எம்மை இந்த விடயத்தில் கைவிடவில்லை, நாம் இழந்த பேசும்சக்தியை திரும்பவும் நமக்கு பெற்றுத்தந்துள்ளான், இதனை மிகவும் கவனமாக நாம் பயன் படுத்தவேண்டும். முன்னய தவறுகளை இப்போதும் நாம் விட்டோமேயானால் இனிமேலும் எம்மை காப்பாற்ற அந்த இறைவனும் விரும்பமாட்டான். ஆகவே, எந்த அரசியல் வாதியானாலும் பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்படாமல் சமூகத்துக்காக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
எம்.எச்.எம் இப்ராஹிம்,
கல்முனை.
