காலமாகி விட்டார்(இன்னாலில்லாஹி)
17.03.2017 இரவு 11.30 மணிக்கு
எனது காது
உள்வாங்கிய செய்தீ“ இது
தொலைபேசி மூலம் என் காதுகளை
சுட்ட அச்செய்தீயை”
நான் நம்பவில்லை.
செய்தி சொன்னவரை
உறுதிப் படுத்திக் கொண்டே
நம்பிக்கை மீது
நம்பி கை வைத்தேன் நான்.
ஹனிபா மௌலவி
நம் இருவருக்குமான உறவுக்கு
வயது 47.
எனக்கு 19 வயது நிகழும் போது
நீங்கள் மத்ரஷா மாணவன்.
உங்கள் மீலாத் மேடை பேச்சுக்களால்
கவரப்பட்டவன் நான்.
அ.சேனை ம.மகா வித்தியாலயத்துக்கு
பின் பக்கமாக இருந்த
உங்கள் தாய் வீட்டில்
நான் உங்களை முதன் முதலில் சந்தித்து
உறவை வளர்த்துக் கொண்டேன்.
மௌலவி
நான் உங்களை
மத்ரஷா மாணவனாக பார்த்திருக்கிறேன்.
நீங்கள் “ஸர்க்கி“ பட்டம் பெற்றது
எனக்கு தெரியும்.
வெளி மாவட்ட மாகாணங்களில்
நீங்கள் குர்ஆன் கற்றுக் கொடுத்ததையும்
நான் அறவேன்.
அட்டாளைச்சேனை M.P.C.S இலிகிதர் நீங்கள்.
கனிஸ்ட கல்வியை மாத்திரம்
கற்றுக் கொண்ட நீங்கள்
OL. / AL பரீட்சைகளில் தேறி
BA.Honas ஆகி
SLEAS ஆகி
கற்க கசடறக் கற்று
கல்விமான் ஆனவர் நீங்கள்.
மத்ரஸா மாணவர்களுக்கு
ஹஸ்ரத் நீங்கள்.
பாடசாலை மாணவர்களுக்கு
ஆசிரியர் , அதிபர் நீங்கள்
கலாசாலை மாணவர்களுக்கு
விரிவுரையாளரும் நீங்கள்தான்.
குத்பா மேடைகளுக்கு கூர்மையான இமாம்.
இஸ்லாமிய அரங்குகளுக்கு
யதார்த்தமான உபன்நியாசி.
மௌலவி
எனக்கும்
உங்களுக்குமான
உறவின் உறவு
உரைக்க முடியாதது.
ஒரு நாளும் நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கவில்லை.
நீங்களும் அப்படித்தான்.
அழைக்கவில்லை என்னை பெயர் சொல்லி ஒரு நாளும்.
மச்சான் என்றோ.
மச்சினன் என்றோ.
மாமன் சாச்சா என்றோ.
மருமகன் என்றோ.
எந்த உறவுமில்லை எங்களுக்கு.
நண்பர்கள்
என்று கூட
நம்மை அழைக்க முடியாது.
நமது உறவு
இந்த உறவுகளுக்கெல்லாம்
அப்பாலானது.
அதையும் விட மேலானது.
ஆத்மார்த்தமான அந்த உறவை
நாம் என்னவென்று உரைப்பது.
மௌலவி
நீங்கள் ஒரு
மதவாதி அல்ல.
மார்க்கவாதி ’.
சமயவாதியும் அல்ல நீங்கள்.
சமூகவாதி.
அல் குர்ஆனை ஓதுவீர்கள்.
ஆனந்த ”விகடனையும்“ வாசிப்பீர்கள்.
வீரகேசரி உங்களுக்கு
விருப்பமான பத்திரிகை.
அல்ஹஸனாத்தை எனக்கு
அறிமுகம் செய்து வைத்தவர் நீங்கள்தான்.
அப்துல் றஊப் மௌலவியின்ll
“ஞானச்சுரங்கம் “ சஞ்சிகையை
நாம் வாசித்திருக்கின்றோம்..
அப்துல்லா பயில்வானின்
”ஈமானின் உண்மையை நீ அறிவாயா.”
புத்தகத்தையும்
நாம் வாசிக்காமல் இல்லை.
எதை எதை வாசித்தாலும்
எப்பொழுதும் ஈமான் பிசகாத
இறுக்கமான நம்பிக்கையாளர் நீங்கள்.
பொய்ம்மையை அழித்து
மெய்ம்மையை வளர்த்த
மெய்ஞானியும் நீங்கள்தான்.l
உயிரின் உயிரே
நீங்கள் ஒரு சராசரி மனிதன்
என்ற வகையில்.
கை கூடாத உங்கள்
காதலை நான் அறிவேன்.
காதலல்லாத
உங்கள் கல்யாணமும் என்கு தெரியும்.
உங்கள் வாழ்வில் அழுக்காறு இல்லாத
சவர்க்காரமான
வலது கையால் கொடுப்பது
இடது கைக்குத் தெரியாத
இரகசியத்திலும் இரகசியமான
உங்கள் நல் அமல்
செயற்பாடுகளையெல்லாம்.
அறிந்து வைத்திருந்த எனக்கு
உங்கள் மரணத்தின்
சூட்சுமத்தை மாத்திரம் அறிய முடியவில்லையே.o
எல்லாம் அறிந்த இறைவனே
இது உனது சோதனையா!
எங்களுக்கு வேதனையா.!
அல்லது போதனையா.!
யா அல்லாஹ்
ஒரு ஜிஹாத் வீரனைப் போல
குருதியால் அவரை குளிப்பாட்டி
அதி சுத்தமாக்கி
சுவனத்துக்கு அழைத்துக் கொண்டாயே.
யா அல்லாஹ்
சுபுஹானல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்.
மௌலவி
நான் உங்களுக்கு முன்
மரணம் ஆகுவேன்.
ஆகினால்
நீங்கள்தான் என்னை
குளிப்பாட்ட வேண்டும்.
தொழுகை நடத்தி
கபுறுக்கு என்னை
காணிக்கையாக்க வேண்டும்.
இவைகளை எல்லாம்
நான் உங்களிடம்
ஒசியத்தாக
உரைக்கக் காத்திருந்தேன்.
அதற்குள் நீங்கள்
உங்கள் ஜனாஸா தொழுகையில்
என்னை பிரார்த்திக்க வைத்து விட்டீர்களே..
மௌலவி
நீங்களென்ன
ஆட்சியில் இருக்கும்
அரசியல் வாதியின் பிள்ளையா.
உங்கள் மரண ஊர்வலத்தில்
அத்தனை மனித பிரவாகம்.
நீங்கள் (
மனிதத்தோல் போர்த்திய மனிதல்ல.
மனிதன் மனிதன் மனிதன்
அதனால்தான்
அத்தனை சன சமுத்திரம்.
உங்கள் மையவாடியில்.
40 பேரா
40x40 க்கும் மேலான.
நாணயவாதிகள்.
உங்கள் ஜனாஸா தொழுகையில்.
கை ஏந்தினார்களே.
மௌலவி உங்களுக்கு
யாருடைய பிரார்த்தனையும் தேவைப்படாது.
பலர் சொர்க்கத்தை தேடுகிறார்கள்.
சிலரை சொர்க்கம் தேடுகிறது.
இதில் இரண்டாவது தேடலாளி நீங்கள்.
முன்கர் நக்கீர்
மலக்குகள் இருவரும்
மலர்ந்த முகத்துடன்.
உங்களை வரவேற்றிருப்பார்களே.
ஜன்னத்துல் பிர்தௌஸ்
புதிய சோடனை பெற்று
ஜோதி வீசி இருக்குமே.
ஹுர்ளின் பெண்களது
குயிலோசையை
வென்ற குரலோசை
உங்கள் காதுகளுக்கு
ரீங்காரம் சேர்க்க வேண்டுமே.
மௌலவி வீ.ரி.எம்.ஹனிபா
மரணமாகிவிட்டார்.
இன்னாலில்லாஹி வயின்னா
இலைஹி ராஜீஊன்
கவிதை : #ஆசுகவி_அன்புடீன்