எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளின் நியமன விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிக அக்கறையுடன் செயற்படுவதுடன் பிரமருடனும் பேசித் தீர்வு பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலத்தின் 15 வருடங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் இடம்பெற்ற மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
2012 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு சுமார் 5 வருடங்கள் கடந்து சென்றுள்ளது. இருந்த போதிலும் தற்போது கிழக்கு மாகாண சபையினால் நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு வயது அதிகரித்து கொண்டு செல்கின்றன அதனால் அவர்கள் இன்று வீதிகளில் இறங்கி சத்தியக்கிரங்களும் உண்ணாவிரதங்களும் மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இதுதொடர்பில் அனைத்து பிரச்சினைகளையும் அறிந்துள்ளோம் இதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு எமது கிழக்கு மாகாண சபை சகல பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போன்று மிகவும் நீண்டகாலமாக எந்தவொரு வேதனமுமின்றி கஸ்ட பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிவரும் ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனங்களை ஒருசில மாதங்களுக்குள் பெற்றுக் கொடுக்கவும் கிழக்கு மாகாண சபையில் முடிவு காணப்பட்டுள்ளது.
அண்மையில் கல்விக்கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை முடித்து வெளியேறிய கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு வெளிமாகாண பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் கெளரவ ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கல்வி அமைச்சர் கெளரவ தன்டாயுதபாணி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் முயற்சியினால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது நீங்கள் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இதன் முதல்கட்டமாக கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களங்கள் மற்றும் அலுவலங்களில் வெற்றிடமாகவுள்ள ஆளணியினரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை முதலமைச்சர் கெளரவ ஹாபீஸ் நஸீர் அஹமட் செயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.