காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊடாக தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காக்க உதவுவோம்' எனும் தொனிப்பொருளில் 12வது மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று 12 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி-02 ஜாமிஉல் அதர் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. றஊப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன், தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி), காத்தான்குடி நகர சபையின் சன சமூக நிலைய உத்தியோகத்தர் திருமதி. உருத்திரகாந்தன், தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நிஸார் உட்பட ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், ஆண், பெண் சகோதர, சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் மற்றும் காத்தான்குடி இரத்த வங்கி அதிகாரி எம்.எம்.எம்.அய்யாஷ், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஏ.எஸ்.எம்.ஸப்ரான் ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
இங்கு இரத்ததானம் செய்த அனைவருக்கும் தாருல் அதர் சனசமூக நிலைய அனுசரணையில் 'டீ மக்' ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இங்கு ஆண்கள் பெண்களாக 175 பேர் தங்களது இரத்தத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.
குறித்த தாருல் அதர் அத்த அவிய்யா தஃவா அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளையும்,மார்க்கப் பிரச்சார பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
DHARUL ATHAR ADH DHAVIYYA.