யுத்தத்தினாலும், இனமுரண்பாடுகளினாலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடனும், திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்டன.
அங்கு சிறுபான்மையின விவசாயிகளினால் பரம்பரை பரம்பரையாக செய்கை பண்ணப்பட்டு வந்த பயிர் நிலங்களும், குடியிருப்பு காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் உள்ள நிலையில் அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கின் விளைவாக ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் குறித்து இந்தக்கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்வைத்த முறையீடுகளை கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம், அவற்றை நெறிப்படுத்தி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித.பி. வனிஹசிங்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக, காணி ஆணையாளர் இந்திக விஜயகுணவர்தன,வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம் ஆகிவற்றின் அதிகாரிகள், பொத்துவில், இறக்காமம், ஆலையடியடி வேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றினர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை பிரநிதிப்படுத்தி காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியினர், மனித எழுச்சி நிறுவனத்தினர் , சமாதான கற்கை நெறிகளுக்கான அமைப்பினர், முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்டக் கிளையினர் போன்றோர் இதில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக், அலிசாஹிர் மௌலானா, எம்.எச்.எம்.சல்மான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், ஷிப்லி பாரூக், ஆர்.எம்.அன்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.



