ஏறாவூரில் தொழுகைக்குரிய இடத்திற்கு தீவைப்பு - வியாழேந்திரன் எம்பி மறுப்பு

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
றாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி அல் அக்ஷா கிராமத்தில் புதன்கிழமை (18.01.2017) புகுந்த கும்பலொன்று அங்கு தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக கொட்டிலையும் அதற்குரிய வேலியையும் சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர்.

மேலும், அங்குள்ள முஸ்லிம்களின் காணிகளைச் சுற்றி அடைக்கப்பட்டிருந்த வேலிகளையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றிருப்பதாக ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கும்பலினால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 

தாங்கள் தங்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியில் துப்புரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரனுடன் புகுந்த கும்பல், உடனடியாக அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதோடு அந்தப் பகுதியில் தொழுகைக்காக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைவிடத்தையும் அதன் வேலிகளையும் சேதப்படுத்தி தீ வைத்து விட்டும் சென்றனர்.

மேலும், கலகக்காரக் கும்பல் சம்பவ இடத்தில் கைப்பேசியில் காணொளிப் பதிவு செய்து கொண்டிருந்த இளைஞனையும் இரும்புக் கம்பியால் தாக்கியதோடு கைப்பேசியையும் பறித்தெடுக்க முயன்றனர்.

இச்சம்பவத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் காயங்களுக்குள்ளான அப்துல் ஹலீம் அலிபராஜ் (வயது 23) என்ற இளைஞன் சிகிச்சைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.' என்றனர்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவிக்கையில்;

நபர் ஒருவர் நீர்க் கேணியை (சிறிய நீர் நிலை) வழி மறித்து பொழுபோக்கிடம் ஒன்றை அமைத்திருப்பதால் அங்கு நீர் தடைப்பட்டு மக்களது வாழ்விடத்திற்குப் பாதிப்பேற்பட்டிருப்பதாக பல தடவைகள் என்னிடம் கூறினர், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றபோது மக்கள் வேலிக்கட்டைகளைப் பிடுங்க ஆரம்பித்து விட்டதால் என்னால் எதுவும் செய்ய முடியாமற் போய் விட்டது.

இது தமிழ் முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களுக்குமிடையில் குழப்ப நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால் பொலிஸாரை அழைப்பித்ததோடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கூறி விட்டு நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

இவ்வளவுதான் நடந்தது, ஆனால் அங்கு நான் எனது அடியாட்களுடன் சென்று அடாவடித்தனம் புரிந்ததாகவும், பள்ளிவாசலை தீயிட்டுக் கொளுத்தியதாகவும் செய்தி பரப்பப்பட்டிருக்கின்றது. இது அவதூறான விடயமாகும்.' என்றார்.

இச்சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -