கொழும்பிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதற்குரிய இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஒதுக்கி தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (11) கொழும்பு பிலிப் குணவர்தன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கொம்பனித்தெரு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகின்றன. இந்த பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெறுவதற்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேல் மாகாணசபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அர்ஸாத் நிஸாம்தீன் மற்றும் கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம். அனஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 5,000 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கொம்பனித்தெரு பிறீமியர் லீக் (எஸ்.ஐ.பி.எல்.) அமைப்பினால் வழங்கப்பட்டன.



