பஷீர் கட்சிக்கு வந்ததுக்கு பின்னர் என்னதான் செய்தார்..?- 2 வது தொடர்

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது 
2 வது தொடர்...
பாராளுமமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவும், முழு அமைச்சராகவும் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தோழர் பசீர் அவர்கள் தனது மக்களுக்கோ, தனது மாவட்டத்துக்கோ அல்லது குறைந்தது தனது சொந்த பிரதேசமான ஏறாவூருக்காவது குறிப்பிடத்தக்க எந்தவித அபிவிருத்திகளும் செய்ததில்லை. 

மாறாக சிங்கப்பூர் கப்பல் கம்பனிகளில் முதலீடுகள் செய்ததுடன், ஏறாவூரிலும், கொழும்பு செவனிலும் ஆடம்பர மாளிகைகளை கட்டியதாகவும், அதற்காக மரத்தினால் செதுக்கப்பட்ட ஆடம்பர உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து விசேடமாக தருவிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டதாகவும் அவ்வூரை சேர்ந்த சில பட்டதாரி மாணவர்கள் என்னிடம் கூறினார்கள். 

மிகவும் வறுமை நிலையில், ஏழைகள் ஏப்பமிட்டு கொண்டிருந்த ஏறாவூரில் அந்த மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டுகொள்ளாது, தன்னை வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனால் அவ்வூர் மக்கள் அவர் மீது வெறுப்படைந்தார்கள். 

அத்துடன் கட்சியின் இரண்டாவது பதவியில் இருந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலாவது கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ததில்லை. மாறாக இவர் தவிசாளராக பதவி ஏற்றதன் பின்புதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்தது. முஸ்லிம் காங்கிரசை விட்டு பலர் பிரிந்து செல்வதற்கு தோழர் பசீர் சேகுதாவூத்தே காரணமாக இருந்தார் என்பதுதான் கசப்பான உண்மையாகும். 

இவர் ஈரோஸ் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தபோது, ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரசை வளர்ப்பதில் பாரிய இன்னல்களையும், இடையூறுகளையும் அவ்வூர் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆயுதமுனையில் எதிர்கொண்டார்கள். அப்பொழுது இக்கட்சியை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. பசீர் சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரசில் இணைந்த பின்பு அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலர் கட்சியில் இருந்து அப்போது வெளியேறினர். 

முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் தவிசாளராக பதவி வகித்தவர்களில் சிறந்த பேச்சாளரான பசீர் சேகுதாவூத் அவர்கள் சற்று வித்தியாசமானவர். கடந்தகால ஏனைய தவிசாளர்கள் கட்சி தலைமைத்துவத்தினை கைப்பேற்ற நேரடி சதிப்புரட்சிகளிலும், கழுத்தறுப்புக்களிலும் ஈடுபட்டு தோல்வி கண்டதனை ஒரு பாடமாக கொண்டு அவ்வாறான நேரடி சதிகளில் இவர் ஈடுபடவில்லை. 

ஆனால் தொடர்ந்து தன்னை முஸ்லிம் காங்கிரசுக்கும், தலைமைக்கும் விசுவாசியாக காட்டிக்கொண்டு, கூட இருந்துகொண்டு குழி பறிப்பதுபோன்று தனது தத்ரூபமான காய்நகர்த்தல்கள் மூலம் வெளிநாட்டு முகவர்களின் உதவிகளை கொண்டு தலைவர் ஹக்கீமுக்கு எதிராக தொடர்ந்து செயற்படுகிறாரா என்ற வலுவான சந்தேகம் கட்சி மட்டத்தில் இருக்கின்றது. 

தலைவர் ஹக்கீமுக்கு எதிராக பல விமர்சனங்களை உண்டு பன்னச்செய்து தலைவரை ஒரு சமூகத் துரோகியாகவும், தலைமத்துவத்துக்கு தகுதி அற்றவராகவும் மக்கள் மத்தியில் காண்பித்து, அதன் பின்பு சத்தமின்றி மக்களினதும், போராளிகளினதும் உதவியுடன் தலைமைத்துவத்தினை கைப்பெற்றும் தந்திரோபாயத்தில் நீண்ட காலமாக எவ்வளவோ முயற்சித்தும், எதுவுமே வெற்றியளிக்கவில்லை. 

இவர் முஸ்லிம் சமூகம் சார்ந்தவர் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக பல ஆதாரங்கள் உள்ளது. அதில், அன்றைய ஈழப்போராட்ட முன்னணி இயக்கமாக இருந்த ஈரோஸ் இயக்கத்தில் முக்கிய அரசியல் பொறுப்பிணை தோழர் பசீர் வகித்திருந்தார். 

தமிழ் இயக்கங்களில் ஈரோஸ் இயக்கத்தினாலேயே முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை யாழ்பாணத்தில் அரங்கேற்றப்பட்டது. அப்போது தோழர் பசீர் அவர்கள் குறிப்பிட்ட பிரச்சினையின்போது இயக்கத்துக்கு விசுவாசமாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயற்பட்டார் என்பது மறுக்க முடியாத வரலாற்று தடயமாகும். 

2002 இன் சமாதான சூழ்நிலையில் விடுதலை புலிகளுக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் கிளிநொச்சியில் பேச்சுவார்த்தை நடைபெற்று, பிரபா - ஹக்கீம் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தில் “வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம்கள்” என்ற ஒரு வாசகமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. 

1990 இல் இருபத்திநான்கு மணிநேர கால அவகாசத்தில் வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் அனைவரும் விடுதலை புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டதை உலகமே அறியும். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று உண்மையை இருட்டடிப்பு செய்து, முஸ்லிம் மக்கள் தாமாகவே விரும்பி வடக்கிலிருந்து வெளியேறினார்கள் என்ற ரீதியில் இந்த வாசகம் உள்ளடக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இவ்வொப்பந்ததுக்கு எதிராக அப்போது எழும்பிய அனைத்து விமர்சனங்களையும் தலைவரே எதிர்கொண்டார்.  தொடரும்..........
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -