“முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலையில் எனக்கு எக்கதி ஏற்பட்டாலும் கட்சியை நான் ஒரு போதும் நீதி மன்றம் சென்று சவாலுக்கு உட்படுத்தமாட்டேன். இன்று எனக்கு எதிராகக் கட்சிக்குள் சதிவலையே தீட்டப்பட்டுள்ளது”
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி கவலை வெளியிட்டார்.அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
செயலாளர் நாயகம் ஹஸனலியின் அழைப்பின் பேரில் நிந்தவூரிலுள்ள அவரது இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடனான பதவி தொடர்பிலான அதிகாரக் குறைப்பு, தேர்தல் ஆணையாளரின் அண்மைய கடிதம் மற்றும் கட்சிக்குள் தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஹஸனலி தெளிவுபடுத்தி உரையாற்றினார். கட்சியின் செயலாளர் நாயகம் பதவியை இல்லாமல் செய்து கட்சியின் உயர் பீடத்திலிருந்து என்னை நீக்கிவிடும் சதி ஒன்று அரங்கேறலாமெனத் தெரிவித்த அவர்,
கட்சிக்குள் மசூரா சபை ஒன்றை அமைத்து பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த மசூராசபை முடிவெடுத்தால் நான் விலகிச் செல்லத் தயாராகவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
ஹஸனலி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“எனது பதவிக்குறைப்பு மற்றும் புறக்கணிப்புகளுக்கு நான் கட்சிக்கும், தலைமைக்கும் செய்த குற்றம் தான் என்ன?
நான் வன்மம் தீர்க்கவோ, ஏட்டிக்குப்போட்டியாகத் தலைமைக்குச் சவால்விடவோ இக்கூட்டத்திற்கு உங்களை அழைக்கவில்லை. எக்குற்றமுமற்ற எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை தெளிவுபடுத்தி என் மனச்சுமையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன்.
பல விடயங்களில் சமூகம் சார்ந்த அநீதிகளுக்கெதிராக மக்களுடன் நான் நின்று உறுதியாகக் குரல் கொடுத்து வந்தமை தான் பிரச்சினைகள் ஆரம்பமாகக் காரணமாகும். குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஏகோபித்து எடுத்த முடிவுடன் நான் உறுதியாக நின்றேன்.
இன்று இந்த நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்தது தாமேதானென மார் தட்டித் தம்பட்டமடிப்போர் சிலர் நம்மிடையே அரசியல் பிரமுகர்களாகவுள்ளனர். ஆனால் முஸ்லிம் மக்களும் நானும் தான் இதற்குக் காரணமென்பதை அடித்துக் கூறுவேன்.
அன்று நம் தலைவர் மர்ஹூம் அஷ்ரபால் ஈர்க்கப்பட்டு கட்சிக்குள் நுழைந்த நான் அவருடன் இணைந்து கட்சி வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன்.
நமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மாமூல் அரசியல் செய்வதற்கென உருவானதல்ல. ஆயுதக் குழுக்களுடன் ஈர்க்கப்படாது, முஸ்லிம் இளைஞர்களைக் காப்பதில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு ஆரம்பித்த இயக்கமேயாகும்.
ஆனால் இன்று கட்சியின் ஆரம்ப நோக்கங்களை மறந்து சோபை இழந்துள்ளது. இத்தகைய மாமூல் அரசியல் கட்சியாக பெனர்களில் மட்டும் இயங்கும் கட்சியாக அது மாறியுள்ளமை கவலை தருகின்றது.
இதைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் இணைந்து செயற்படலாமே என்றுதான் கூறத் தோன்றுகின்றது.
நான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்பட வேண்டுமென்பதில் சிலர் குறியாகவேயுள்ளனர். முஸ்லிம் தேசியம் என்பதற்கு வரைவிலக்கணமே தெரியாத இவர்களா முஸ்லிம்களின் போராட்டத்தை முன்னெடுக்கப்போகிறவர்கள். கட்சி ஆரம்பித்த காலகட்டங்களில் பல்வேறு சவால்களை, உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர்கள் நாம்.
அன்று பதினாறு ஆயுதக்குழுக்களிருந்த காலகட்டம். அவர்களது துப்பாக்கிக் குண்டுகளுக்கு மத்தியில் முஸ்லிம் தேசியத்துக்காக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகப் போராடினோம்.
இப்படி கட்சியை வளர்த்த எம்மைக் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டுமென்பதில் எவரெல்லாமோ குறியாகவிருந்து சதிவலை விரித்த வண்ணமுள்ளனர். தலைமை எனது பதவி அதிகாரத்தைத் திட்டமிட்டு குறைத்ததால் ஏற்பட்ட முரண்பாடு ஒரு வருடமாக நீடிக்கின்றது. இதனைச் சமரசம் செய்யப் பல குழுக்கள் என்னிடம் வந்தன.ஆனால் வருவார்கள், பேசுவார்கள், உடன்பாட்டுடன் செல்வார்கள். பின் திரும்பியே வரமாட்டார்கள் என்ற நிலைமைதான் நீடிக்கின்றது.
இரவு, பகலாக இருபக்கத்தையும் மூட்டிவிட முனைந்துள்ளவர்களின் கைங்கரியமே இதில் மேலோங்கி நிற்கின்றது. கட்சியின் அதிகாரத்தை ஒருவரிடத்தில் குவிப்பதற்காக செய்யப்பட்ட யாப்பு மாற்றம்தான் இன்றைய முரண்பாடுகளுக்கு முக்கிய காரணமாகும். 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயம் கரையோர மாவட்டத்தை மிக இலேசாகக் கேட்டுப் பெற்றிருக்கலாம். இதேபோல் பல சந்தர்ப்பங்களில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தாது விட்டு வாளாதிருக்கின்றது முஸ்லிம் காங்கிரஸ்.
இவையெல்லாம் மறைந்த தலைவருக்குச் செய்யும் பெரும் துரோகமென்றே கூறவேண்டும். இன்று பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாறியுள்ளது. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல சட்டங்களையே மாற்றும் நிலையுள்ளது.
ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான விடிவு குறித்து எதுவுமேயில்லை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய காலகட்டம் இது. இதனை முஸ்லிம் காங்கிரஸே செய்ய வேண்டுமே தவிர அமைச்சர் ரிஷாத்தையோ அதாவுல்லாவையோ கேட்க முடியாது.
கட்சியின் இரு செயலாளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஊடகங்களுக்கு நானே கசியவிட்டதாக என் மீது குற்றச்சாட்டு கூறப்படுகின்றது. இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். இன்றுள்ள நிலையில் கட்சிக்குள் எனக்கு எத்தகைய சதிகள், இக்கட்டுகள் விளைவிக்கப்பட்டாலும் நீதிமன்றம் சென்று கட்சியை ஒருபோதும் சவாலுக்கு உட்படுத்தமாட்டேன்.
கட்சியிலிருந்து வெளியேற்றி னாலும் வேறுகட்சி எதிலும் நான் இணையப்போவது மில்லை. இறை நீதி ஒன்று கிடைக்கும் என்றார்.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக ஹஸனலியே தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானமும் எடுக்கப்பட்டது.
சலீம்-
விடிவெள்ளி
