அலப்போவும் அழுகையும்..
++++++++++++++++++++
தொழப் போகாமல்
துஆ கேட்காமல்
அலப்போக்கு போஸ்ட் போட்டு
ஆவது ஒன்றுமில்லை
பஸாரில் ஏமாற்றி
பாவங்கள் புரிபவர்கள்
பஷ்ஷாருக்கு ஏசுவதால்
பயனேதும் உண்டாமோ?
உரிய உரிமைகளை
உறவுகளிடம் பறித்தவர்கள்
சிரிய மக்களுக்காய்
சீறுவதில் என்ன பயன்?
வாயால் பேசும் மார்க்கம்
வாழ்க்கையில் இல்லாதோர்கள்
தீயோர்க்கு எதிராய் ஒன்றாய்
திரளுவதால் நலன் உண்டா?
ஊரில் சேவை செய்ய
ஒரு சதமும் கொடுக்காதவர்கள்
போரில் இழந்தவர்க்கு
பொருளதவி நல்குவாரா?
இடிபாடுக்குள் சிக்குண்ட
இளசுகளைக் காணும் போது
வடிகிற கண்ணீர் எங்கள்
வாழ்க்கையையும் மாற்றட்டும்.
அந்த மக்களுக்காய்
ஆண்டவனிடம் ஏந்தும் முன்
சொந்தத் தவறுகளில்
சுத்தமாகி வெளிவருவோம்.
சாமத்தில் எழுவோம்
ஷாமுக்காய் அழுவோம்
நாமத்தில் மட்டுமல்ல
நடைமுறையிலும் முஸ்லிமாவோம்.
-முஹம்மட் நிழோஸ்-
