மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சோ ஆகியோர் மறைவுக்கு காங்கிரசார் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப் பட்டதினால் விவசாயிகள், வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை இன்னும் 50 நாளில் சரியாகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். ஆனால் நிதி மந்திரி அருண் ஜெட்லி 6 மாதம் ஆகும் என்கிறார்.
இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பினரையும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான உரிய விலையை தேர்தலின் போது பா. ஜனதா சந்திக்கும்.
வறட்சியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து உள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்கனவே 2 முறை இடைக்கால முதல்வராக பணியாற்றி உள்ளார். இப்போது முதன் முறையாக முழுமையான முதல்- அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். எனவே அவர் மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல் படுத்துவதுடன் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மின் உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பதுடன் சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்கும் அரசாக இருக்க வேண்டும். லஞ்சம்-ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வேகமாக செயல்பட வேண்டும்.
காமராஜர், எம்.ஜி.ஆர் ஆகியோர் வாழ்ந்த வீடுகளை நினைவு இல்லமாக ஆக்கியது போல ஜெயலலிதா வாழ்ந்த வீட்டையும் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். மக்களுக்காகவே நான்.. என்று மக்களுக்காக வாழ்ந்த அவரது வீட்டை நினைவு இல்லமாக ஆக்குவதுடன் அவர் நடித்தபோது பெற்ற பரிசுகள் முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் பெற்ற பரிசுகள் போன்றவற்றை நினைவிடத்தில் வைத்து, எதிர்காலத்தில் அவரை பற்றி பொதுமக்கள் அறியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. உடையும் என்று சுப்பிரமணியசாமி சொல்லி இருப்பது அவரது சொந்த கருத்து மேலும் அது பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக யார் வருவார்? என்பது அவர்களது உள்கட்சி பிரச்சினை.
ஒரு வாரம் ஜெயலலிதா மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் பிறகு அந்த கட்சி செயற்குழு, பொதுக்குழு கூடி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள். நான் அ.தி.மு.கவினால் வளர்க்கப்பட்டவன். அந்த கட்சியை வளர்க்கவும் பாடு பட்டு உள்ளேன். எனவே சுப்பிரமணியசாமி கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
பாரதீய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டணி பற்றியோ கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்கோ தமிழகம் வரவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை சந்திப்பதற்கு ஒரு முறையும், இப்போது அவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும்தான் வந்துள்ளார். எனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் இல்லாமல் அனுமதிக்கப்பட்டபோது பார்க்கவில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும்.
காங்கிரசில் கோஷ்டி என்பது இல்லை. காங்கிரசில் உள்ள எல்லா தலைவர்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக செயல்படுகிறோம். தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னுடன் விவாதம் நடத்த தயாரா? என்று கேட்டுள்ளார். அவர் முதலில் தந்தையான காங்கிரசில் இருக்கும் குமரி ஆனந்தனிடம் விவாதம் அளித்து விட்டு பிறகு என்னுடன் விவாதம் நடத்த வரலாம்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன்தான் கூட்டணி பற்றி பேச்சு நடத்துவோம்.
ஜெயலலிதா மரணம் பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தில் அவரை பற்றி கொச்சைப்படுத்தவோ வீண் புரளியை பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னதாக ரெயில் மூலம் ஈரோடு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுக்கு ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா ரவி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆ£ எம் பழனிச்சாமி, பள்ளி பாளையம் பி.டி. தனகோபால், திருப்பூர் புறநகாமாவட்ட முன்னாள் பொறுப்பாளா தென்னரசு, வக்கீல் வி.என்.சுப்பிரமணியம், முத்துக்குமார், மொடக்குறிச்சி மோகன் குமார மங்கலம், சேலம் மேகநாதன், சேலம் மாநகா மாவட்ட தலைவர் மேகநாதன், வேலம்பாளையம் கிழக்கு மாவட்ட தலைவா பொயசாமி, விவசாய அணி மாநில பொது செயலாளா மக்கள் ராஜன், கிரி ரவிச்சந்திரன் மற்றும் பலர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.(மாம)
