விளையாட்டுத்துறை திணைக்களமும் விளையாட்டுத்துறை அமைச்சும்இணைந்து நடாத்திய 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் கடந்த மாதம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்நடைபெற்று முடிந்தது. இதில், வழமை போன்று மேல் மாகாணம்கூடுதலான பதக்கங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது. தேசியவிளையாட்டு விழா வரலாற்றில் போட்டி நிகழ்வுகள் வட, கிழக்குமாகாணங்களில் இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இம்முறை இடம்பெற்ற போட்டிகளில் 4 தேசிய சாதனைகளும், 2 போட்டிச்சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட இலங்கையின் 9மாகாணங்களில் கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தையும், போட்டியை நடத்தியவட மாகாணம் 9ஆவது இடத்தையும் பெற்றது.
இதில் வடமாகாணத்தின் அனிதா ஜெகதீஸ்வரம் கோல் ஊன்றிப் பாய்தலில்தேசிய சாதனையை ஏற்படுத்தி தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். வடமாகாணத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றியாக இதுஅமைந்தது. வடக்கில் நிலவிய யுத்தம் விளையாட்டுத்துறைக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும் இன்று பெரும்வளர்ச்சியை நோக்கி வட மாகாணத்தின் விளையாட்டுத்துறை செல்வதைக் இந்த சாதனை மூலம் காணலாம்.
மறு முனையில் கிழக்கு மாகாணம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் 7ஆவதுஇடத்திற்கு தெரிவு செய்யப்பட்டபோதும், அதற்கடுத்த வருடத்திலிருந்து தொடர்ந்து 8ஆவது இடத்தையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் இம்முறை இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவின் வெற்றிகளைப் பார்க்கும்பொழுது இம்மாகாணமும் விளையாட்டில் வளர்ச்சிப் போக்கில் சென்றுகொண்டுள்ளமையை காணலாம்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா இம்முறை மட்டக்களப்பு வெபர்விளையாட்டரங்கில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றன. இதனைமாகாணப் பணிப்பாளர் மதிவண்ணன் அவர்களுடன் இணைந்து மாவட்டவிளையாட்டதிகாரிகளான வீ.ஈஸ்வரன் (அம்பாரை), எஸ்.விஜயநீதன்(மட்டக்களப்பு), ஏ.எச்.விமலசேன (திருகோணமலை) ஆகியார் முன்னின்று நடாத்தியிருந்தனர். அதில் வெற்றி கொண்டவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகினர்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்குமாகாணத்திற்கு 23 பதக்கங்கள் மாத்திரம் கிடைத்தன. எனினும் 2016ஆம் ஆண்டுயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்திற்கு 30 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றதுடன் பல போட்டிகளில் பதக்கம்பெறும் வாய்ப்பும் நழுவிப் போனமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு 7ஆம் இடத்தைப் பெறுகின்ற வாய்ப்பும் துரதிஷ்டவசமாக இல்லாமல்போனது. அதாவது 100 மீட்டர் ஓட்டத்தில் அஷ்ரப், 200 மீட்டர் ஓட்டத்தில்ரஜாஸ்கான், ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டம், ஆண்களுக்கான கயிறிழுத்தல், 110 மீட்டர் தடைதாண்டல், ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் தங்கம்வெல்லும் வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்புக்கள் துரதிஷ்டவசமாக கைநழுவின.
கிழக்கு மாகாணத்தின் வீரா்கள் இம்முறை நல்ல பெறுபேற்றைவெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக கிழக்கு மாகாணவிளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் ஏற்கனவேகுறிப்பிட்டார். அதன்படியே அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
கிழக்கு மாகாணம் இம்முறை 7 தங்கப் பதக்கங்களையும், 12 வெள்ளிப் பதக்கங்களையும், 11 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 30பதக்கங்களைப் தம்வசப்படுத்தியது. கடந்த ஆண்டுகளைவிட இம்முறை 2016ஆம்ஆண்டுக்கான விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண வீர, வீராங்கனைகள்தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளமைகவனிக்கத்தக்கது.
பணிப்பாளர் மதிவண்ணன் குறிப்பிட்டது போன்று, கிழக்கு மாகாணவிளையாட்டுத்துறை திணைக்களமும், விளையாட்டு அதிகாரிகளும் தேசியவிளையாட்டு விழாவிற்காக சிறந்த திட்டமிடல்களைச் செய்திருந்தனர். அதன் விளைவாகவே இந்த முன்னேற்றப் பாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குழு விளையாட்டுகள்
தேசிய விளையாட்டு விழாவின் பெரும்பாலான குழுநிலைப் போட்டிகள் நாட்டின்பல பிரதேசங்களிலும் இடம்பெற்றதுடன் மெய்வல்லுனர் போட்டியுடன் சிலகுழுநிலைப் போட்டிகளும் இறுதிக் கட்டமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றன.ஆண்களுக்கான போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும்,பெண்களுக்கான போட்டிகள் வெபர் விளையாட்டரங்கிலும் இடம்பெற்றன.
அந்த வகையில் பெண்களுக்கான போட்டியில் கிழக்கு மாகாணம் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. கிழக்கு மாகாண பெண்கள் கிரிக்கெட்அணியை திருகோணமலை மாவட்ட அணி பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் அதில் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வீராங்கனைகள் சிலரும்இடம்பெற்றிருந்தனர்.
இறுதிப் போட்டியில் சபரகமுவ மாகாணத்தை தோற்கடித்ததன்மூலம் கிழக்குமாகாணம் தங்கப் பதக்கத்தைப் பெற்றது. இதில் மிகச்சிறந்த வீராங்கனையாகஅம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பர்சானா நஸார் தெரிவு செய்யப்பட்டுகிண்ணம் மற்றும் பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்.
பெண்கள் அணியில் கே.எம்.ஐ.எராந்தி, பர்சானா நஸீர், எம்.கே.என்.சி.பெரேரா,வீ.டி.ஜெயவீர, எல்.டி.நிஸன்சலா, ஜீ.எல்.பி.நிமஸிக்கா, டபிள்யு.ஜீ.டி.மதுசா,எம்.எஸ்.எச்.மஹேசிக்கா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அந்த அணியின் பொறுப்பாளராக ரசிக்க சம்பத் கடமையாற்றினார்.
ஆசீக் – குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் எறிதல் போட்டி வீரர்
ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில்வடமேல் மாகாணத்தை தோற்கடித்துகிழக்கு மாகாணம் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.தங்கப்பதக்கத்தை நிச்சயம்வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் வீரா்கள் தெரிவில் சிலபிழைகள் நடந்துள்ளமை தோல்விக்குக் காரணம் என்று அதிகாரிகளால்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிழக்குமாகாண ஆண்கள் கிரிக்கட் அணியைஅம்பாரை மாவட்ட அணி பிரதிநிதித்துவப்படுத்தியது.
வெண்கலப் பதக்கம் பெற்ற அணியில் எம்.எம்.அஹமட், எம்.ஏ.ஹக்ரம்,எஸ்.எல்.மனாஸ், ஐ.எம்.சாஸீர், எஸ்.எம்.ஆரீப், ஏ.எஸ்.சிபான், கே.எம்.அக்ரம்,எச்.டபிள்யு.கே.ஜெயஸின், ஏ.எஸ்.எஸ்.அஹமட், ஜே.சீ.டெலீமா, நிக்ஸிஅஹமட், எஸ்.டி.எம்.சபீக், எஸ்.எம்.ஹிஜாஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
அதேபோன்று, வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கடற்கரை கபடி போட்டியில்கிழக்கு மாகாண அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தைப்பெற்றுக்கொண்டது. ஊவா மாகாண அணியை இறுதிப் போட்டியில் தோற்கடித்துதங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இதில் சிறந்த வீரராக கணேஸ்ராஜ் சினோதரன்தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு கிண்ணமும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அணியில் இடம்பெற்ற வீரா்களாக எச்.எஸ்.எம்.ஹல்கலகே, ஏ.பீ.ஜீ.எம்.சத்துரங்க,எம்.எஸ்.கே.ரணசிங்க, டபிள்யு.ஏ.எல்.சம்பத், கே.எஸ்.சினோதரன், எம்.ஜே.ஏ.சஜாஆகியோர் இடம்பெற்றனர். அதில் அம்பாரை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த சஜாஈரானில் இடம்பெற்ற இளையோர் கபடிப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு பதக்கம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லோரினாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி திடலில் இடம்பெற்றது. அரையிறுதிப்போட்டியில் கிழக்கு மாகாணமும், வட மாகாணமும்மோதிக்கொண்டன. அரையிறுதியில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குகிழக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப்போட்டி மேல் மாகாணத்துடன் நடைபெற்றது. இப்போட்டியும் மிகவும்விறுவிறுப்பாக இருந்தது. போட்டியின் நிறைவில் மேல் மாகாணம் 71 – 66 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. கிழக்குமாகாண அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கிழக்கு மாகாண அணியைமட்டக்களப்பு மாவட்ட அணி பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் இப்போட்டியில்கிழக்கு மாகாணம் தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.குறித்த வருடம் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாணம் பெற்றிருந்தது.
அஷ்ரப் : 100 மீட்டர் ஓட்ட வீரர்
இம்முறை கிழக்கு மாகாண கூடைப்பந்தாட்ட அணியில்ஆர்.லோவல், கே.தவசீலன்,எஸ்.விதுர்சன், வி.விவேக்,என்.சிதர்ஸன், வை.அருண்,எஸ்.டினோசன், வி.விஜி,ஜீ.ஏ.வெனிட்டோ, டி.டி.நிதுர்சன்,எஸ்.விஜிதரன், ஆர்.டிலுஸ்கரன்ஆகியோர் இடம்பெற்றுவிளையாடியிருந்தனர்.
அது தவிற, ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் கிழக்கு மாகாணத்திற்குவெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன் இறுதிப் போட்டி துரையப்பாவிளையாட்டரங்கில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண அணியுடன் மோதி வெற்றி பெற்ற மேல் மாகாணத்திற்கு இதில் தங்கப் பதக்கம் கிடைத்தது. கிழக்குமாகாணம் சார்பாக அம்பாரை மாவட்ட அணி கலந்து கொண்டது.
இந்த அணியில் எச்.எம்.சோமரத்ன, டி.எம்.கே.டி.நாலக்க குமார,என்.ஜீ.ஜீ.சமரசிங்க, ஜீ.டி.கருணாரத்ன, எம்.வீ.எஸ்.ஜீ.செனவீரத்ன,பீ.டி.பீ.மஞ்சுலகுமார, டி.எம்.சிசிர குமார, எம்.ஏ.ரத்னமாலக்க,பீ.டி.ஈ.எஸ்.கருணாரத்ன, யு.பீ.டி.சி.கஜனாயக்க ஆகியார் இடம்பெற்றிருந்தனர்.
கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வெள்ளிப் பதக்கம்கிடைத்தது. இதன் இறுதிப்போட்டி வடமேல் மாகாணத்துடன் இடம்பெற்றது.இப்போட்டி நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணஅணியில் ஏ.கசுனி தாறுக்க, ஈ.டி.வாசனா மதுமாலி ஆகியோர்இடம்பெற்றிருந்தனர்.
கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. மேல்மாகாணத்தை இறுதிப் போட்டியில் 28-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில்தோற்கடித்து தங்கப் பதக்கத்தை கிழக்கு மாகாணம் வென்றடுத்தது. கடந்த 5வருடங்களாக தொடர்ச்சியாக கிழக்கு மாகாணம் கபடிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று வருவது விஷேட அம்சமாகும். கபடிப் போட்டிகள்அநுராதபுரத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண அணியை திருகோணமலை மாவட்ட கபடி அணிபிரதிநித்துவப்படுத்தியது. இதில் மட்டக்களப்பு மாவட்ட வீரா்கள் பலரும்இடம்பெற்றிருந்தனர். கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட அணியேதேசிய விழாவில் கிழக்கு மாகாணம் சார்பாக கலந்து கொண்டமை நினைவு கூறத்தக்கது.
கபடி அணியில் இடம்பெற்ற வீரா்களாக ஏ.பீ.ஜீ.எம்.சத்துரங்க,டபிள்யு.ஏ.எல்.சம்பத், எச்.எஸ்.எம்.ஹல்கலகே, பீ.ஏ.கே.ஜே.அதுகோரல,எம்.ஏ.எஸ்.கே.ரணசிங்க, டி.கே.எஸ்.டிகோவித்த, எல்.டி.ஆர்.ஏ.மஹேஸ்,ஏ.பீ.டி.பீ.மதுசங்க, எல்.ஏ.எஸ்.தர்சன, கே.சினோதரன், எல்.சஞ்சீவன்,எஸ்.எப்.ஆனப்பயன் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
தனிநபர் போட்டிகள்
கராத்தே காட்டாவில் 50 கிலோ எடைப் பிரிவில் எஸ்.பாலுராஜ் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இப்போட்டி மாத்தறை கொடவில்ல உள்ளகஅரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியில் அவர் சிறந்த வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணமும் பெற்றுக்கொண்டார். இலங்கை அணியிலும்இடம்பெற்று இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலானபோட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோன்று, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில்காட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும் பெற்று அந்த வருடத்தின் சிறந்தவீரருக்கான கிண்ணத்தையும் பாலுராஜ் பெற்றிருந்தார். கடந்த வருடம் காட்டாபிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்திருந்தமை இவரது திறமைக்கு மற்றொரு சான்றாக உள்ளது.
இன்று கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல முழு இலங்கைக்கும் தனதுதிறமையினால் பெருமை சேர்த்துள்ளவர் பாலுராஜ் என்றால் அது மிகையாகாது.
எஸ்.பாலுராஜ் : கராத்தே காட்டா போட்டி வீரர்
தைக்வொண்டோ (TAKWONDO) ஆண்கள் பிரிவில்வெல்டர் 74- 80 கிலோ எடைப் பிரிவு போட்டியில்கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தடபிள்யு.டி.எல்.ஜீ.ஏ.கயாசான் வெள்ளிப் பதக்கத்தைப்பெற்றார்.
அதுபோன்று, பெண்களுக்கான 62-67 கிலோவிற்குஇடைப்பட்ட பிரிவில் ஏ.ஸ்டெல்லா மேரிவெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். கெவி வெய்ட்ஓவர் 73 கிலோ எடைப் பிரிவு போட்டியில்ஜீ.எம்.என்.சாந்தமாலி வெண்கலப் பதக்கத்தைசுவீகரித்தார்.
52-57 கிலோ எடைப் பிரிவிற்கான மல்யுத்தபோட்டியில் கிழக்கு மாகாணத்தின் என்.நிசோத்வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 43-46 கிலோ எடைப் பிரிவுக்கானபோட்டியில் கிழக்கின் கே. துசிதன் வெண்கலப் பதக்கத்தையும்பெற்றுக்கொண்டனர். 97-125 கிலோ எடைப் பிரிவில் டி.எம்.எல்.திஸாநாயக்கவெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஜூடோ போட்டியில் ஆண்களுக்கான 100 கிலோ எடைப் பிரிவில் கிழக்குமாகாணத்தின் டபிள்யு.ஏ.ஆர்.பி.எல்.விக்ரமசிங்க வெள்ளிப் பதக்கத்தைவென்றடுத்தார். பெண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் கிழக்குமாகாணத்தின் எஸ்.எம்.டி.மல்காந்தி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். 78கிலோ எடைப் பிரிவு போட்டியில் கிழக்கு மாகாணத்தின் ஏ.எச்.டி.ரத்னமாலிவெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
ரையத்லோன் (TRIATHLON) போட்டியில் பெண்கள் பிரிவில் கிழக்குமாகாணத்திற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தது. எல்.கே.ஜீ.கே.குமாரி தங்கப் பதக்கத்தை வென்றடுத்தார். ஜீ.ஜீ.எம்.கே.பண்டாரவுக்கு வெள்ளிப் பதக்கம்கிடைத்தது. இந்த இரண்டு வீராங்கனைகளும் அம்பாரை மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வுசு (WUSHHU) ஆண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு போட்டியில் கிழக்குமாகாணத்தின் எச்.பி.டி.எம்.சுமனரத்ன வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். 52கிலோ எடைப் பிரிவு போட்டியில் ஜே.கிருஸ்ணா வெள்ளிப் பதக்கத்தைப்பெற்றார். 56 கிலோ ஏடைப் பிரிவு போட்டியில் கிழக்கு மாகாணத்தின்ஜே.எஸ்.கே.சந்ரகாந்தா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான (56 -60) கிலோ எடைப் பிரிவினருக்கான குத்துச்சண்டைபோட்டியில் கிழக்கு மாகாணத்தின் ஜே.எஸ்.கே. கந்ரகாந்த வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
மெய்வல்லுனர் போட்டிகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பாவிளையாட்டரங்கில் இடம்பெற்றன. செப்டம்பர் 29ஆம் திகதி முதல் ஒக்டோபர்2ஆம் திகதிவரை இடம்பெற்ற இப்போட்டிகளில் நாட்டின் ஒன்பதுமாகாணங்களையும் சேர்ந்த பெருந்தொகையான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை சார்பாக கலந்து கொள்கின்ற கிழக்குமாகாண வீரா்களான ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான், ஏ.எல்.எம்.அஷ்ரப் போன்றவீரா்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
ரஜாஸ்கான் : 200 மீட்டர் ஓட்ட வீரர்
எனினும், 100 மீட்டர் ஓட்டத்தில்அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஷ்ரபிற்குவெள்ளிப்பதக்கம்தான் கிடைத்தது.போட்டித் தூரத்தை 10.6 செக்கன்களில்ஓடி முடித்த அவர் துரதிஷ்டவசமாகஇரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டார். அஷ்ரப் இந்தியாவில்இடம்பெற்ற சாப் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு 100 மீட்டர்ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோன்று, 200 மீட்டர் ஓட்டத்தில் ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான் 21.9 செக்கன்களில்போட்டித் தூரத்தை ஓடி இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைதனதாக்கிக் கொண்டார். எனினும் இவரும் தங்கப் பதக்கத்தை வெல்வார் எனபலமாக நம்பப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டும், 2014ஆம் ஆண்டும் ரஜாஸ்கான் 200 மீட்டர் ஓட்டத்தில்தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இம்முறைரஜாஸ்கான் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தால் தேசிய விளையாட்டு விழாவில்200 மீட்டர் ஓட்டத்தில் ஹெட்ரிக் தங்கப் பதக்கத்தைப் பெற்ற வீரா் என்றபெருமையைப் பெற்றிருப்பார். எனினும் அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
பரிதிவட்டம் எறிதலில் கிழக்கு மாகாணத்தின் ஆசீக் 42.34 மீட்டர் தூரம் எறிந்துதங்கப் பதக்கத்தை பெற்றார். தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பரிதிவட்டம் எறிதல் போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தவர் என்ற பெருமை இவரைச் சாரும்.
அதேபோன்று, குண்டெறிதலில் 13.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் ஆசிக் வென்றார். இதன்மூலம் கிழக்கு மாகாணத்திற்கு தனிஒருவராக இரண்டு பதக்கங்களை அவர் பெற்றுக் கொடுத்தார்.
இம்முறை கிழக்கு மண்ணுக்கு மிகப்பெரும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தவர்நீளம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட வீரா் எம்.ஐ.எம்.மிப்ரான் ஆகும். இவர்நீளம் பாய்தலில் 7.72 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தினைப் பெற்றார்.அத்தோடு தேசிய விளையாட்டு விழாவின் சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும்தெரிவு செய்யப்பட்ட அவருக்கு கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மெய்வல்லுனர் வீரா் ஒருவருக்கு இப்படியொருவிருது கிடைத்தது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். அம்பாரைமாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மிப்ரான் கடந்த 2015ஆம் ஆண்டுநடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் நீளம் பாய்தலில் வெண்கலப் பதக்கதைப் பெற்றிருந்தார்.
கிழக்கு மாகாணம் சார்பில் 110 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் பங்கு கொண்டதிருகோணமலையின் வஸீம் இல்காம் வெள்ளிப் பதக்கத்தை வென்றடுத்தார்.தேசிய விளையாட்டு விழாவில் வஸீமுக்கு இது முதலாவது பதக்கமாகும்.
400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் கிழக்கின் எஸ்.பீ.ஏ.தர்சன போட்டித் தூரத்தை 53.5 செக்கன்களில் போட்டித் தூரத்தை ஓடி வெண்கலப் பதக்கத்தைப்பெற்றுக்கொண்டார்.
கடந்த காலங்களை விட இம்முறை மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்தபெறுபேற்றினை கிழக்கு மாகாண வீரா்கள் வெளிப்படுத்திய போதிலும் முக்கியபோட்டிகள் பலவற்றில் பதக்கம் பெறும் வாய்ப்பு தவறிப்போனதுகவலைக்குரியதாகும்.
குறிப்பாக 4X100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்புஇல்லாமல் போனது. இப்போட்டியில் கடைசியாக பெட்டன் மாற்றத்தின்போது,கிழக்கு மாகாண அணி வீரர் பெட்டனை கையிலிருந்து நழுவவிட்டதால் கிழக்குமாகாணத்திற்கு பெரும் ஏமாற்றம் வந்தது.
குறுந்தூர ஓட்ட வீரா்களான ரஜாஸ்கான், அஷ்ரப் போன்றோர் சிறப்பானஓட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் கடைசி வீரராக ஓடிய வஸீம் இல்ஹாம்பெட்டனை தவறவிட்டதால் தங்கப் பதக்கத்தை கிழக்கு மாகாண வீரர்கள் இழந்தனர்.
மிப்ரான் : நீளம் பாய்தல் போட்டி வீரர் (42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் சிறந்த மெய்வல்லுனர் வீரர்)
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கிழக்குமாகாணத்தின் என்.உதயவாணி 36.14மீட்டர் தூரம் எறிந்து நான்காவதுஇடத்தைப் பெற்றார். அதேபோன்றுஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில்கே.ஏ.எம்.விஜேரத்ன 15:37.5நிமிடங்களில் ஓடி 5ஆவது இடத்திற்குதெரிவானார்.
ஆண்களுக்கான கெம துரோநிகழ்ச்சியில் ஜீ.ஏ.எஸ்.சமந்த 40.57மீட்டர் தூரம் எறிந்து 5ஆவது இடத்தைப்பெற்றார். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் எச்.எம்.என்.என்.நந்தசேன4:57.2 ஒடி 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர்கள் பதக்கம்பெறாவிட்டாலும் மிகச்சிறந்த பெறுதியை கிழக்கு மாகாணத்திற்குப்பெற்றுக்கொடுத்தனர்.
எனினும், உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்ட குறுகே, நஹ்தீர்,ஏ.எம்.றிஸ்வான் ஆகியோர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் எனஎதிர்பார்க்கப்பட்டபோதும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகவில்லை. அதிலும்அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் வீரா் ஏ.எம்.எம்.றிஸ்வான்முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும். 110 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில்ஏ.ஜே.சிப்கார் அஹமட் 16.9 தெரிவுப் போட்டியில் 5ஆவது இடத்திற்கு தெரிவாகியபோதிலும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகவில்லை.
இம்முறை நடைபெற்ற விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் களத்தில் நின்று வீரா்களுக்குத்தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். அத்தோடு மாவட்ட விளையாட்டுஉத்தியோகத்தர்களான வீ.ஈஸ்வரன், எஸ்.விஜயநீதன், ஏ.எச்.விமலசேன மற்றும்பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களும் தமது பங்களிப்புக்களை வழங்கிகிழக்கு மாகாணம் கூடுதலான பதக்கங்களை பெறுவதற்கு காரணமாகஇருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் சார்பில் பதக்கம் பெற்றவர்களில் அம்பாரை மாவட்டவீரா்கள் முன்னிலை வகிக்கின்றனர். மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கம்பெற்ற 6 வீரா்களில் 4 வீரா்கள் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்து தேசியமட்டத்தில் அம்மாகாண வீரா்கள் வெற்றி பெற வேண்டுமாயின் கிழக்கு மாகாணவிளையாட்டுத்துறை அமைச்சும், கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் சிறந்த திட்டமிடல்களுடன், வீரர்களுக்கு சிறந்த பயிற்சிகளையும் கொடுத்து வழிநடாத்துகின்றபோதுதான் அது சாத்தியமாகும்.
கிழக்கு மாகாண சபையினால் விளையாட்டுத் திணைக்களத்திற்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வீரா்களுக்குதேசிய பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளிப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்பதே அம்மாகாண விளையைாட்டுத் துறை ஆர்வளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உரிய அதிகாரிகள் சரியான, ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிடலுடன் கிழக்கின்விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு களம் அமைப்பார்களாயின் மிப்ரான், ஆசீக்,ரஜாஸ்கான், அஷ்ரப், வஸீம், தர்சன, பாலுராஜ் போன்ற இன்னும் பல வீரா்கள்தேசிய ரீதியில் பிரகாசித்து சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றும் காலம்உருவாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
எஸ்.எம்.அரூஸ்-
By: thepapare-
By: thepapare-