யுத்தம் மற்றும் இயற்கை அனத்தங்களினால் பாதிக்கப்பட்ட மண்முனைப்பற்று பிரதேச மக்களுக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் ஒல்லிக்குளம் கிழக்கு, ஒல்லிக்குளம் மேற்கு, கீச்சான்பள்ளம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேசங்களில் நிர்மானிக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தை ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கள விஜயமொன்றை மேற்கொண்டு வீட்டுத் திட்ட பணிகளை பார்வையிட்டார்.
நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன், பல பிரதேசங்களில் வீட்டுத்திட்டப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது. அத்திட்டத்துக்கு அமைய, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் வன் செயல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு, ஓலைக் குடிசைகளிலும், தகரக் கொட்டில்களிலும் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்ற மண்முனைப்பற்று பிரதேச மக்களுக்கான வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீலங்கா அனுசரணையில் ஒல்லிக்குளம் கிழக்கு, ஒல்லிக்குளம் மேற்கு, கீச்சான்பள்ளம் மற்றும் மண்முனைப்பற்று ஆகிய பிரதேசங்களில் மேற்படி வீட்டுத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்மானம் பணிகள் விரைவில் பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு வழங்கி வைக்கவும் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்வீட்டுத் திட்டப்பணிகள் தொடர்பில் கலந்துரையாடி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரடி கள விஜயமொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார். இதன் போது, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடியதுடன், வீட்டுத் திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.
இராஜாங்க அமைச்சரின் இவ்விஜயத்தில் ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.