பாட்டுக்கும் ரோட்டுக்கும் வோட்டு போடுவர்களாக நாம் இருக்க கூடாது - ஏ.ஆர்.எம்.ஜிப்ரி



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
திர்காலங்களில் பாட்டுக்கும் ரோட்டுக்கும் வோட்டு போடுகின்ற சமூகமாக, குட்டக் குட்டக் குனிகின்ற சமூகமாக இருக்காது எங்களை ஏமாற்ற வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.

அண்மையில் சாய்ந்தமருதில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 8ஆவது புதிய கிளையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

16 ஆண்டு காலமாக கல்முனைத் தொகுதி என்ன முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. என்ன அபிவிருத்தியைக் கண்டிருக்கிறது. நாங்கள் இட்ட வாக்குகளுக்கு என்ன பெறுமதி கிடைத்திருக்கிறது என்பதை நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டிய அவசியமில்லை. 16 ஆண்டு காலமாக கிழக்கின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனைத் தொகுதியினுடைய அபிவிருத்திகள் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது கல்முனையில் இருக்கின்ற மாநகரசபைக் கட்டிடம் எஸ்.எஸ். காரியப்பர் அவருடைய காலப்பகுதியில் இருந்த அதே பழைய கட்டிடமாகத்தான் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. நாவிதன்வெளியில் கூட புதிய பிரதேச சபைகள் உருவாகி இருக்கின்றன. ஆனால் இன்றும் எங்களுடைய பிரதேசம் அன்றைய நிலையில்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது.

அதேபோல திண்மக் கழிவுகள் அகற்றுகின்ற பணிகளுக்கான நிதிகளை வழங்க ஸ்தாபனங்கள் முன்வந்த போதும் கூட அதற்கும் இடம் கொடுக்கவில்லை. இங்கே இருக்கின்ற அதாவது நாங்கள் அதிக வாக்குகளை வழங்கி 3 பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி இருக்கின்ற அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனைச் செய்து முடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, எங்களது உள்ளூர் வீதிகளைப் பாருங்கள். சிராஸ் மீராசாஹிப் இருந்த மாநகரசபைக் காலத்தில் உள்ளூர் வீதிகள் போடப்பட்டதை நாங்கள் யாரும் மறுக்க முடியாது. அத்தனை வீதிகள் யாவும் அவருடைய காலத்தில் போடப்பட்டது.

ஆனால், இந்தப் பிரதேசத்திலே இருக்கின்ற எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான தரகுப்பணத்தைகேட்டு பேச்சுவார்த்தையில் இடம்பெறுகின்ற உரிய பணம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் வீதிகளுக்கு வருகின்ற பணத்தைக் கூட விரட்டியடிக்கிறார்கள். 

சாய்ந்தமருதிலே ஒரு தொழில் பேட்டை அமைத்திருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் அறிந்த தொழில் பேட்டைதான். அதில் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. அதுவும் ஒரு சிலருக்குதான் கிடைக்கிறது. சாய்ந்தமருதிலே இருக்கின்ற தோணாதான் அந்த தொழிற்பேட்டை. தோண்டி தோண்டி கோடிக்கணக்கிலே தங்களுடைய பைக்கட்டை நிறைக்கின்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஏன் கூறுகின்றேனென்றால் அவர்களுக்கு தொடர்ந்து வருமானம் வரவேண்டும் என்பதற்காக ஒரு நல்லமுடிவை எடுக்காது, சுரண்டிச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்தும் நாங்கள் மடையர்களாக இருக்க முடியாது. 16 ஆண்டு காலத்திலே அவர்கள் செய்யாத அபிவிருத்திகளை நாங்கள் கவனிக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பக்கம் இருக்கின்ற அக்கரைப்பற்றைப் பாருங்கள் அக்கரைப்பற்றைப் பார்த்தால் கல்முனையினுடைய நிலை என்னவென்று தெரியும். மற்றப்பக்கம் காத்தான்குடியைப் பார்த்தால் கல்முனையில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கின்றது என்பது தெரியும். 

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியைப் பார்த்தால் தெரியும். அந்த வீதியில் பழைய ஆஸ்பத்திரிக்கு அருகில் இருக்கின்ற பாலம். அந்தப் பாலம் நான் சிறுவனாக இருக்கும் போது அன்று கண்ட காட்சி இன்றும் அதே நிலையில்தான் காணப்படுகின்றது. இன்று பாலத்தினருகில் குப்பையைக் கொட்டி நாய்களெல்லாம் குப்பைகளைக் கிளறி நாற்றம் ஒரு பக்கம். இரண்டு பைசிக்கல்கள் ஒரே நேரத்தில் போக முடியாத நிலையில் இன்றும் அபிவிருத்தி செய்ய முடியாமல் இந்தப் பாலம் கவனிப்பாறட்டுக் கிடக்கின்றது. அந்தப் பாலத்தைக் கூடச் செய்து முடிக்க முடியாத 16 வருட கால ஆட்சிதான் இந்தக் கல்முனைத் தொகுதியிலே நடந்து கொண்டிருக்கின்றது. 

அபிவித்திக்காக ஒதுக்கப்பட்ட 500,600 கோடி பணத்தை 4 மாத காலங்களிலே இந்த கல்முனைத் தொகுதியை அபிவிருத்தி செய்து ஷீரோ மீதி வைக்கப் போகிறோம் என்று கூறினார்கள். ஆனால் 3 மாதங்கள் கடந்து விட்டது. எந்த வேலையும் நடக்கவில்லை. 

விளையாட்டுத் துறையைப் பொறுத்தமட்டில் எத்தனையோ மைதானங்கள் புனரமைக்கப்பட இருக்கின்ற போது ஏமாற்றுவதற்காக சந்தாங்கேணி மைதானத்திற்குள் ஒரு நீச்சல் தடாகம் அமைக்கப் போகிறோம் என்று ஒரு மாயை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை விட அத்தியாவசியமான தேவைகள் எங்களுடைய பிரதேசத்திலே நிறைய இருக்கின்றன. .

எங்களுடைய தலைமையைப் பாருங்கள் கைத்தொழில் வர்த்தக அமைச்சராக, 38க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு தலைவராக இருந்து கொண்டு செய்கின்ற சேவைகளை விட, றிஷாத் பௌண்டேசன் வாயிலாக ஒவ்வொரு பாடசாலை பற்றிய தகவல்களையும் திரட்டி வைத்துக் கொண்டு நாட்டினுடைய தலைமைகளோடு பேசி முஸ்லிம் பாடசாலைகளில் இருக்கின்ற குறைபாடுகள் என்ன? ஆசிரியர் பற்றாக்குறை எங்கு காணப்படுகின்றது? என்பதை ஆராய்ந்து அதை ஒர் ஆவணமாகத் தயாரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். 

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க வேண்டுமென்று உயர்அதிகாரிகளை அதததனோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நாடிப் பேசி தீர்த்த பின்பு அங்கு

செல்கின்றார் பெயர் வைப்பதற்காக. அதாவது சுட்ட தட்டிலே ரொட்டி சுடுவதற்கும். ஊரானுடைய பிள்ளைக்கு பெயர் வைப்பதற்குமான ஒரு தலைவரை நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.

ஆகவே இப்படியான தலைவர்களைத் துரத்தியடித்து விட்டு எங்கள் சமூகத்துக்கு கல்வியாக இருக்கட்டும், தொழில்வாய்ப்பாக இருக்கட்டும், எந்த ஒரு பிரச்சினையையும் தலைநிமிர்ந்து போராடி பாராளுமன்றத்திலே அது சம்பந்தப்பட்ட விவாதங்களிலே துணிவாகப் பேசி எங்களுக்கு தீர்வைப் பெற்றுத் தருகின்ற ஒரு தலைமைதான் எங்களுடைய கட்சியின் தலைமை றிஷாத் பதியுதீன் அவர்கள். அவரை இங்கு நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.

எனவே எதிர்காலங்களில் பாட்டுக்கும் ரோட்டுக்கும் வாக்களிக்கின்ற சமூகமாக, குட்டக் குட்டக் குனிகின்ற சமூகமாக நாங்கள் இருக்காது எங்களை ஏமாற்ற வருபவர்களுக்கும் மாமனிதர் அஷ்ரபினுடைய பழைய வார்த்தையை பேசிக் கொண்டு வருகின்றவர்களுக்கும் உரிமை உரிமை என்று சொல்கின்றவர்களுக்கும் நாங்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். அதற்காக கல்முனைத் தொகுதியிலே இருக்கின்ற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -