முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு புதிய உபகுழுவை நியமித்திருப்பதற்காக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா பாராட்டு தெரிவித்துள்ளமை கவலை தருகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
உலமா கட்சித்தலைவரால் உலமா சபைத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாடும், முஸ்லிம்களும் பாரிய பல பிரச்சினைகளுக்கும் பொருளாதார கஷ்டங்களுக்கும் முகம் கொடுக்கும் நிலையில் இன்றைய தலையாய பிரச்சினை என்பது முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு சமூகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமாயின் ஆகக் குறைந்தது அந்த சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். அவ்வாறான எந்த கோரிக்கையும் இல்லாத நிலையில் ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற உபகுழு நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்களினதும் நாட்டினதும் இறைமைக்கு ஏற்பட்ட அவமானமாகும்.
இவ்வாறு சட்டத்திருத்தம் பற்றி முயற்சியை கடுமையாக எதிர்க்க வேண்டிய உலமா சபை திருத்தத்துக்காக உப குழு நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்றிருப்பதன் மூலம் நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமண சட்டத்தில் இஸ்லாத்துக்கு முரணான சட்டம் உள்ளதாக உலமா சபை ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படும். அவ்வாறு இஸ்லாத்துக்கு முரண்பட்ட என்னென்ன சட்டங்கள் உள்ளன என்பதை பொது மக்களுக்கு பகிரங்கமாக உலமா சபையால் அறிவிக்க முடியுமா என நாம் கேட்கிறோம்.
அத்துடன் கடந்த மஹிந்த ஆட்சியின் போது வெளிநாட்டு ஏகாதிபத்தியங்கள் எமது நாட்டுக்குள் மூக்கை நுழைப்பதற்கு இடமளிக்கப்படாத நிலையில் தற்போதைய ஆட்சியில் அவர்கள் மூக்கை நுழைத்தது மட்டுமன்றி பாரிய தலையீடுகளும் செய்வதன் விளைவே இத்தகைய சட்டத்திருத்த அறிவுறுத்தல்களாகும். ஜி எஸ் பி சலுகை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல, முழு மக்களுக்குமானதாகும். அதற்காக முஸ்லிம்களின் உரிமையில் கைவைப்பது தர்மமா என்பதை உலமா சபை கேட்காமல் வரவேற்பளிப்பது வரலாற்றுத்தவறாகும் என்பதை உலமா கட்சி பொறுப்புடன் சொல்லிக்கொள்கிறது.