நிந்தவூரில் பாசிப்பயறு அறுவடை வெற்றிகரமாக நிறைவு..!

சுலைமான் றாபி-
தேசிய உணவு உடற்பத்தி செயற்திட்டத்தின் நஞ்சற்ற உணவு உடற்பத்தி திட்டத்தின் கீழ் நிந்தவூர் மாட்டுப்பளை உடையார் அலி விவசாய பண்ணையில் பயிரிடப்பட்ட மூன்றாம் போக பாசிப்பயறு செய்கைத் திட்டமானது இன்றையதினம் (13) வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது.

சிறுபோக நெல் அறுவடை நிறைவடைந்து, பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கிடையிலான சுமார் இரண்டு மாத இடைவெளியில் வெற்று நிலமாகக் கிடக்கும் நெற்காணிகளில் இந்த பாசிப் பயறுச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விவசாயத்திணைக்களம், கமநல சேவைகள் மத்திய நிலையம் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகம் ஆகியவைகளின் நெறிப்படுத்தலில் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்பயிர்ச் செய்கையானது சுமார் நான்கரை ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மூன்றாம் போகமும் இப்பயிர்ச் செய்கையினை அனைத்து விவசாய நிலங்களிலும் செய்கையிட விவசாயத் திணைக்களத்தினால் வேண்டப்பட்ட போதும், நிந்தவூர் பிரதேசத்திலேயே இந்தப் பயிர்ச் செய்கை வெற்றியளித்துள்ளது. இவ்வாறான சிறுகாணி பயிர்ச் செய்கை செய்யப்படுவதனால் விவசாய நிலங்களுக்கு அதிகளவான நைட்ரஜன் கிடைப்பதோடு, வேளாண்மை பயிர்ச்செய்கையில் அதிக விளைச்சல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், யூரியா பசளையின் தேவையினை குறைத்துக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைகின்றது. 

இதேவேளை இந்த பாசிப்பயறு செய்கையானது ஏக்கருக்கு சுமார் 300 கிலோ முதல் 400 கிலோ வரையான விளைச்சளைத் தருவதோடு, கிலோ ஒன்றுக்கு (கட்டுப்பாடு விலையைத் தவிர்த்து) 280 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அறுவடை நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபா உம்மா ஜலீல், கமநல சேவைகள் உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக், விவசாய திணைக்களத்தின் நிந்தவூர் வலய உதவி விவசாய உத்தியோகத்தர் திருமதி அழகுமலர் ரவீந்திரன், பிரதி விவசாய போதனாசிரியர்கள் எம்.எம், பாசில், எம்.எம்.சமீர், எஸ். தவநேசன் விவசாய பரிசோதகர்கள், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவை மத்திய நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர்கள் இவ்வறுவடை நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -