பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ஒக்டோபர் 30ம் திகதி நேற்றைய தினம் இலங்கை பொலிஸ் சேவையின் தேசிய சமூக சேவை பொலிஸ் விஷேட தினமாக பிரகடனப்படுத்தபட்டுள்ளது.
தேசிய சமூக சேவை பொலிஸ் தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட 30.10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ராஜதுரை கிராமத்தில் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் காவலரன் திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியபந்து வெதகெதர தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.ஏ.டி.கே.கருணாநாயக்க கலந்து கொண்டனார்.
இதன் போது ராஜதுரை கிராம நடமாடும் பொலிஸ் காவலரன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பி.ஏ.டி.கே. கருணாநாயக்காவினால் நாடா வெட்டி, பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு திறந்து வைக்கப்பட்ட ராஜதுரை கிராம நடமாடும் பொலிஸ் காவலரன் இன்று தொடக்கம் 1 மாத காலம் இடை விடாது இயங்குமெனவும்,இதில் கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைத்தல், முறைப்பாடுகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும், சுகாதாரம், கல்வி, கலாசார, ஆத்மீக, விளையாட்டு, போக்குவரத்து, சிரமதானம் போன்ற சேவைகளும் குறித்த நடமாடும் பொலிஸ் காவலரன் வழங்குமென நடமாடும் பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரி ரீ.மகேஸ்வரன் தெரிவித்தார்.
ஒரு பொலிஸ் நிலையப் பிரிவில் ஒரு கிராமத்தை தெரிவு செய்து அந்த கிராமத்தில் நடமாடும் பொலிஸ் காவலரன் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் ஆரையம்பதி ராஜதுரை கிராமத்தில் திறந்து வைக்கப்பட்ட ராஜதுரை கிராம நடமாடும் பொலிஸ் காவலரன் திறப்பு விழாவில் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால்,காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜெயசீலன் உட்பட ஏனைய பொலிஸ் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், இந்து மத குரு,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.