ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அரச அதிகாரிகள் பயன் படுத்தப்படுகின்றர்களா என்ற சந்தேகம் எழுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக சில அரச அதிகாரிகள் செயற்படும் விதம் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அவர்களுடன் உரையாடும் போது புரிந்து கொள்ள முடிவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னெடுக்கும் சிறந்த திட்டங்களை சீர் குலைப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரச அதிகாரிகளை பயன் படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான விடயங்கள் மூலம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரச அதிகாரிகள் பாரபட்சமின்றி தமது கடமைகளை மேற்கொள்வதுடன் சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் தூதுவர்களாக மக்கள் மத்தியில் செயற்படுபவர்கள் அதிகாரிகளே. எனவே அவர்களின் நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் அரசாங்கத்தின நடவடிக்கைகளையே கணிக்கின்றனர்.
அதனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.