எம்.ஐ.முபாறக்-
அரபு நாடுகள் பலவற்றில் தொடங்கப்பட்ட அரபு வசந்தம் என்ற யுத்தம் குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு வந்துள்ளபோதிலும்,சிரியாவின் யுத்தம் மாத்திரம்தான் 5 வருடங்களைத் தாண்டியும் தொடர்கின்றது.5 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்; ஒரு கோடி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிழந்துள்ளனர்.பொருட் சேதங்கள் மற்றும் காயங்கள் கணக்கில் எடுக்கப்பட முடியாதவை.அந்நாட்டின் பொருளாதாரம் 30 வருடங்கள் பின்தங்கியுள்ளது.
சிரியாவின் அரசைக் கவிழ்பதற்கான யுத்தத்தில் இத்தனை வருடங்களாக அரசையும் கவிழ்க்க முடியவில்லை;அரசை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களையும் ஒழித்துக் கட்ட முடியவில்லை.இரண்டு அணிகளும் பலமாக நின்று மோதி வருகின்றன.இதனால் சேதங்கள் அதிகரித்ததுதான் மிச்சம்.
இந்த யுத்தத்தில் பலம்பொருந்திய நாடுகள் எல்லாம் இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்று செயற்படுகின்றன.ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் சிரியா ஜனாதிபதிக்கு ஆதரவாக அவருடன் கைகோர்த்துப் போராடி வருகின்றன.
மறுபுறம்,அமெரிக்கா தலைமையில் சவூது,துருக்கி போன்ற நாடுகள் சிரியா ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.சிரியா ஜனாதிபதிக்கு எதிராகாக் களத்தில் நின்று போராடி வரும் ஆயுதக் குழுக்கள் பலவற்றுக்கு அமெரிக்காவும் அதன் தலைமையிலான நாடுகளும் ஆயுத உதவி உள்ளிட்ட பலவகையான உதவிகளையும் செய்து வருகின்றன;அசாத்தைப் பதவி கவிழ்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
அதேவேளை,சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கமும் போராடி வருகின்றது.இந்த அமைப்புக்கு அமெரிக்கா மறைமுகமான உதவிகளை வழங்கிக் கொண்டு இதற்கு எதிராகவே அமெரிக்கா போராடி வருகின்றது.
ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஈராக்கில் சண்டையிட்டு வரும் குர்திஸ் பேஷ்மக் ஆயுதக் குழுவுக்கும் சிரியாவில் சண்டையிட்டு வரும் குர்திஸ் ஆயுதக் குழுவுக்கும் அமெரிக்கா ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வருகின்றது.
இவ்வாறு சிரியா யுத்தம் பலமுனைத் தாக்குதல்களுடன் சென்றுகொண்டிருக்கின்றது.மறுபுறம்,இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. பல தடவைகள் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றபோதிலும்-யுத்த நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டபோதிலும் இதுவரை எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.யுத்தம் முடிவின்றித் தொடர்கின்றது.
இந்த யுத்தம் இவ்வாறு முடிவின்றித் தொடர்வதற்கும் மக்கள் தரப்பில் அதிக உரிழப்புகள் ஏற்படுவதற்கும் ரஷ்யாதான் பிரதான காரணமாகும்.சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆதரவாக-அவரது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிரியாவுக்குள் நுழைந்த ரஷ்யா அங்கு யுத்தத்தின் போக்கையே மாற்றி அமைந்துவிட்டது.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாத ஒரு நிலைமையை தோற்றுவித்துள்ளது.
அசாத்திற்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியுள்ளதால் எந்த வகையிலும் அசாத்தைத் தோல்வியடையவிடக்கூடாது என்பதில் ரஷ்யா உறுதியாக இருக்கின்றது.ஆசாத்தின் தோல்வியானது ரஷ்யாவின் தோல்வியாகவும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் வெற்றியாகவுமே அமையும்.
இதனால் தான் என்ன விலை கொடுத்தாவது,எத்தனை மக்களை அழித்தாவது சிரிய அரசைக் காப்பாற்றிட வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியா இருக்கின்றது.இதனால் மக்கள் அழிவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சிரிய அரசுக்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களை அழித்தல் என்ற பெயரில் அப்பாவி மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர்.ரஷ்யாவின் தொடர்ச்சியான-கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள் மக்களின் நிலைகளைக் குறி வைத்தே நடத்தப்படுகின்றன.
இப்போது ரஷ்யாவின் கொலைக் களமாக மாறி இருப்பது சிரியாவின் அலெப்போ மாகாணம்தான்.சிரிய அரசுக்கு எதிரான அதிகமான ஆயுதக் குழுக்கள் அங்கு நிலை கொண்டிருப்பதால் ரஷ்யாவின் விமானங்கள் அந்த மாகாணத்தை பதம் பார்த்து வருகின்றன.இதனால் அப்பாவி மக்களின் உரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலைமை ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள் குரல் எழுப்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸும் பிரிட்டனும் ரஷ்யாவை போர்க் குற்றவாளியாக அறிவித்துள்ளன.ரஷ்யா சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலண்ட் அறிவித்துள்ளதுடன் பிரிட்டனின் வெளியிறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் அதை ஆமோதித்துள்ளார்.அத்தோடு,ரஷ்யாவின் இந்த அட்டூழியத்துக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் இராஜதந்திர உறவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.இந்த மாத இறுதியில் பிரான்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அதை ரத்துச் செய்து பிரான்ஸுக்கு ரஷ்யாவின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இப்போது இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர யுத்தம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.அந்த யுத்தத்தில் பிரிட்டனும் பிரான்ஸுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது.இதனால்,சிரியா யுத்தம் இப்போது சர்வதேச அரங்கில் மேலும் பலமாகப் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
பிரான்ஸின் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்க்கும்போது அது சிரியாவில் ஏற்பட்டுள்ள அவலத்துக்கு எதிரானதாகவும் மனிதக் கொலைக்கு எதிரானதாகவும் தெரியலாம்.ஆனால்,உண்மை அதுவல்ல.சிரியா யுத்தத்தில் ரஷ்யா பின்வாங்க வேண்டும் ;அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் என்ற அமெரிக்காவின் காய் நகர்த்தலின் விளைவே பிரான்ஸின் இந்த ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
ரஷ்யா 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிரியாவின் யுத்த களத்துக்குள் நுழைந்தபோது துருக்கியின் ஊடாக ரஷ்யாவை அமெரிக்கா எதிர்த்தது.ரஷ்யாவின் யுத்த விமானம் ஒன்றைக்கூட துருக்கிய விமானப் படை சுட்டு வீழ்த்தியது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் இராஜதந்திர யுத்தமே இடம்பெற்றது.துருக்கிக்கு இறக்குமதித் தடையையும் ரஷ்யா விதித்தது.இதனைத் தொடர்ந்து இப்போது பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை வைத்து ரஷ்யாவுக்கு நெருக்குதலைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா .
சிரியா விவகாரத்தின் ஒரு சில விடயங்கள் தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவதையும் அவதானிக்கமுடிகின்றது.இந்த வருடம் பெப்ரவரி மாதமும் கடந்த மாதமும் சிரியாவில் இந்த இரண்டு நாடுகளும் இணங்கியே போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தன.
அந்த இரண்டு தடவைகளும் போர் நிறுத்தம் தோல்வியில்தான் முடிந்தது.கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தம் ஒரு வாரத்திலேயே முறிவடைந்தது.இந்த முறிவுக்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்துதான் அலெப்போ மாகாணம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.இருந்தாலும்,சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதப் பேரவலத்துக்கு-படுகொலைகளுக்கு ரஷ்யாவும் ரஷ்யாவுடன் இணைந்துள்ள ஏனைய தரப்புகள் மாத்திரம் காரணம் அல்ல.அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் காரணமாக இருக்கின்றன.
ரஷ்யாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சாட்டிய நிலையில் சிரியாவை அழித்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்.