பாரத லக்ஸ்மனின் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவருடைய மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தமது உருக்கமான கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார். “எனது தந்தை உயிரிழந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ஒரு நியாயமான தீர்ப்பு நல்லாட்சியின் மூலம் கிடைத்துள்ளது.
தந்தையின் மரணத்திற்குப் பின்னர் நானும் எனது தாயும் இரவில் நித்திரையின்றி துன்பத்தில் தத்தளித்தோம், இந்தத் தீர்ப்புக்காக 5 வருடங்கள் காத்திருந்தோம். மரண தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி நான் கவலையடைகின்றேன், ஆனால் ஒரு கொலைக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
தந்தையின் மரணத்திற்கு பல ஊடகங்கள் எனக்கு உதவியாக இருந்தன. ஒருசில ஊடகங்கள் எதிரான கருத்துக்களை முன்வைத்திருந்தன, ஆனால் என்னுடன் எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் கண்ணீருடன் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். நல்லாட்சி அரசாங்கத்தில் முதன்முறையாக ஒரு கொலைக் குற்றத்திற்கு தெளிவான நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
இன்று எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடையும் என நான் நம்புகின்றேன். எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் சார்பிலும் எனது குடும்பத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.