மீண்டும் வருவோம் : விட்டுச் செல்ல இல்லை எடுத்துச் செல்ல மீண்டும் வருவோம் - கொழும்பில் மஹிந்த

நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால் மீண்டும் நாம் வருவதற்கு தயாராக உள்ளோம். நீங்கள் கேட்பது எதுவோ அதை பெற்றுகொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக பேராதனையில் கடந்த வியாழக்கிழமை (28)ஆரம்பித்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரை இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது. பேரணியின் இறுதிக் கூட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர்,

வைத்தியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் என பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். மாணவர்களுக்கான சீருடையில் ஏமாற்றப்பட்ட பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் பலர் வந்திருக்கிறார்கள். எமது பாதயாத்திரை தொடர்பில் செய்தி எழுதுவதற்காக இவர்கள் வரவில்லை. தற்போதைய ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வதைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே எம்மோடு கைகோர்த்துள்ளார்கள். 

வரலாற்றில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்ட இந்த பாதயாத்திரையில் பெருந்திரளான மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். இதேபோன்று பிரேமதாஸ ஆட்சி காலத்தில் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன உள்ளிட்ட பலர் பாதயாத்திரை சென்றோம். இக்காலப் பகுதியிலும் எமக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இப்போது ஆட்சியில் உள்ளவர்களை போல் பிரேமதாஸ நீதிமன்றுக்கு சென்று பாதயாத்திரையை தடை செய்யுமாறு கெஞ்சவில்லை. 

ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் 8 மாதமும் நிறைவடைய முன்னரே எட்டு இலட்சம் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். ஆனால் இன்று எமக்கு எதிரான ஆயுதமாக குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி பிரிவு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். நாங்கள் இதற்கு பயந்தவர்கள் அல்ல. சிறையில் அடைத்தாலும் எமது போராட்டம் முற்றுப்பெறாது. 

ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். உலகில் சர்வதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை இந்த ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

எதிர்க் கட்சி என்கிறார்கள். ஆனால் அங்கு ஐந்தோ ஆறு பேர்தான் இருக்கின்றார்கள். மக்கள் மீது வரிச்சுமையை விதித்துள்ளனர். இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கின்றார்கள். 

நாட்டை காக்க போராடிய இராணுவ வீரர்கள் வாய்கால் சுத்தம் செய்கின்றனர். இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை இல்லாமல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இராணுவ வீரர்களை குப்பை வாளியில் போட்டுள்ளனர். 

இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இதற்காகவே இந்த கூட்டம் கூடியுள்ளது. நீதியை ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் மாற்ற முடியாது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -