எம்.எச்.எம்.அன்வர்-
காத்தான்குடி டெலிகொம் வீதியை செப்பனிடுதல் தொடர்பான கலந்துரையாடல் (28) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறுக் தலைமையில் அவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்ஆப்பள்ளிவாயல் மற்றும் அதன் கீழுள்ள சிறிய பள்ளிவாயல் நிருவாகத்தினரும் அப்பகுதியிலுள்ள சமூக விளையாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்,
காத்தான்குடி டெலிகொம் வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குண்றும் குழியுமாக காட்சியளிக்கிறது. இம்மக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து மிகவும் சிரமப்பட்டு இது விடயமாக கொழும்புக்கு அடிக்கடி பயணம் செய்து இவ்வீதியை கொண்டுவந்துள்ளேன். இதை எந்த வகையிலும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
61 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 44 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள 1390 மீட்டர் நீளமும் 21அடி அதாவது 6.5 மீட்டர் அகலமுள்ள இக்கொங்கிறீட் வீதியானது காத்தான்குடி பிரதேசத்திலேயே மிக அகலமான கொங்கிறீட் வீதியாக அமையவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதன் புணரமைப்பு பணிகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் 6 மாதத்திற்குள் நிறைவடையும் இதற்கு தடையாகவுள்ள மதில்கள் வேலிகளை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தனதுரையில் தெரிவித்தார். மேற்படி வீதி விஸ்தரிப்பு தொடர்பில் சமூகமளித்திருந்த பிரதிநிதிகளால் கேள்விகள் கேட்கப்பட்டதுடன் மாகாணசபை உறுப்பினரால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.