கொழும்பு - பெளத்தாலோக்க மாவத்தையில் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவுக்கு அருகே சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தி 'எக்கம லே' எனும் ஒன்றுபட்ட அமைப்பூடாக நடத்தப்பட்ட அமைதி பேரணியில் புகுந்து குழப்பம் விளைவித்தமை தொடர்பில் 'சிங்க லே' எனும் அமைப்புக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸார் அறிக்கையொன்றினை தாக்கல் செய்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பான செய்திகள் மற்றும் அதன் காட்சிகளை மேலதிக விசாரணைகளுக்காக பெற்றுக்கொள்ளவும் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் நேற்று நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 15 ஆம் திகதி 'அபி ஒக்கோம எகம லே' (நாம்அனைவரும் ஒரே இரத்தம்) எனும் சமூக, அமைப்புக்கள் பலவற்றின் கூட்டிணைப்பில் அமைதிப் பேரணியொன்று பெளத்தாலோக்க மாவத்தையில் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவுக்கு அருகில் இடம்பெற்றது. முறையான அனுமதிகளைப் பெற்று மிக அமைதியாக இப்பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 முதல் 60 பேர் வரை பங்கேற்றிருந்ததுடன் மாலை 4.00 மணிக்கே இப்பேரணி நடந்தது. இதன்போது சிங்க லே என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட பிரிவினர், அப்பேரணியில் இருந்தவர்களுக்கு எதிராக கோஷங்களை விடுத்து அங்கு குழப்பம் விளைவிக்கும் வண்ணம் நடந்து கொண்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இவ்வாறு குழப்பம் விளைவித்தவர்கள் தரப்பில் 5 தேரர்களும் அவர்களுடன் வந்த 15 பேருமாக மொத்தம் 20 பேர் இருந்தனர். இந் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையிலான வாய்த்தர்க்கத்தை பொலிஸார் தலையிட்டு பாரிய அசம்பாவிதம் ஒன்று ஏற்படுவதை தடுத்தனர். பொலிஸார் தலையீடு செய்யாமல் இருந்திருப்பின் இன, மத நல்லிணக்கத்துக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக நிலைமை மாறியிருக்கும்.
எனவே இது குறித்து செய்யும் விசாரணைகளுக்கு அமைதிப் பேரணி மற்றும் குழப்பக் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ஊடக நிறுவனங்கள் விசாரணைகளுக்கு கையளிக்க உத்தரவிட வேண்டும். என பொலிஸார் கோரினர். இதற்கு அனுமதியளித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ் 6 இலத்திரனியல் ஊடகங்களுக்கு இது தொடர்பிலான மாற்றங்கள் செய்யப்படாத உண்மைக் காட்சிகள் அடங்கிய பதிவுகளை கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்க அந்தந்த ஊடக நிறுவன செய்தி ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது குறித்த அடுத்த கட்ட விசாரணைகள் செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.