மோடியின் 'தூய்மை இந்தியா' போன்றதே மு.கா.வின் 'வீட்டுக்கு வீடு மரம்'..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை போன்றதே முஸ்லீம் காங்கிரசின் 'வீட்டுக்கு வீடு மரம்' திட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நடைபெற்ற 'வீட்டுக்கு வீடு மரம்' எனும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்த இந்நிகழ்வில் அப்துல் மஜீத் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் 'தூய்மை இந்தியா' எனும் திட்டத்தை டில்லி புறநகர் பகுதியொன்றில் ஈக்கில் கட்டை பிடித்து ஆரம்பித்து வைத்திருந்தார். அத்திட்டத்தை இந்திய மக்கள் பெரும் வரவேற்புடன் ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் முன்னணி நட்ச்சத்திரங்களும் கிரிக்கட் வீரர்களும் தொண்டர் அமைப்பினரும் மோடியின் அத்திட்டத்துடன் தங்களையும் இணைத்து வீதிகளில் இறங்கி ஈக்கில் கட்டுக்களை பிடித்து துப்பரவு செய்த காட்சிகளை ஊடகங்களில் காண முடிந்தது.

அது போன்றதொரு திட்டத்தையே எமது முஸ்லிம் காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் தேசிய நிகழ்வை தலைவர் ரவூப் ஹக்கீம் கந்தளாயில் ஆரம்பித்து வைத்துள்ளார். நாடு பூராவும் வீட்டுக்கு வீடு மரம் எனும் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இவ்வேலைத் திட்டத்தின் ஊடாக ஒன்றிணைந்து நமது கட்சியின் பலத்தை மேலும் மேலும் சக்தி பெற்றதாக மாற்ற வேண்டும்.

உலகம் இன்று மாசடைந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சூழலை சுத்தமாக வைத்திருப்பது ஆண், பெண் இரு பாலாரினதும் கடமையும் பொறுப்புமாகும். ஈமானில் பாதி சுத்தம் என்று நமது இறை தூதர் இயன்றுள்ளார்கள்.

அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸ் சர்வதேச சூழல் தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத் திடலில் குப்பைகளை பொறுக்கியதை பார்த்து உலகம் வியந்து பாராட்டியது. இது நமது நாட்டு பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. என்றாலும் நமது மக்கள் வீட்டுக் குப்பைகளை தெருக்களில் போடுவதனை பார்க்கின்றோம். இதன் மூலம் நமது சூழலை நாமே மாசுபடுத்துகின்றோம். நம் சமூகத்தில் இந்த இழிவான நிலைமை மாற வேண்டும். பசுமையான சூழல் ஒன்றுக்காக சகிப்புத்தன்மையுடன் நம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்" என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -