துபாய் விமான விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய ஜாசிம் இஸ்ஸா முகமது மரணம்..!

துபாய் விமான விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 300 பேரை காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 282 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். கேரளத்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளில் பணி புரிந்து வரும் இவர்கள் குடும்பத்துடன் அந்த விமானத்தில் பயணித்தனர்.

பிரிட்டனை சேர்ந்த 18 பேரும் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 11 பயணிகளும் விமானத்தில் இருந்தனர். 18 விமான ஊழியர்களும் என மொத்தம் 300 பேர்களுடன் துபாய் விமான நிலையத்தில் நேற்று மதியம் 12.50 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கத் தயாரானது. தரையிறங்கிய அடுத்த நிமிடம் விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். 'குய்யோ முறையோ ' என கூச்சலிட்டனர். 

தீயணைப்பு வண்டிகள் கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்த விமானத்தை நோக்கி விரைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. விமானத்தின் அத்தனை அவசரக் கதவுகளும் உடனடியாகத் திறக்கப்பட்டு பயணிகளை வெளியேற்றும் முயற்சி நடந்தது. மள மளவென நடந்த மீட்புப் பணியில் அத்தனைப் பயணிகளும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர். எனினும் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல், அத்தனை பயணிகளையும் தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

ஆனால் விமானப்பயணிகளை காப்பாற்றும் முயற்சியில், ஜாசிம் இஸ்ஸா அல் பாலுசி என்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனை ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ''துபாய் விமான நிலைய விபத்தில் பயணிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர், ஜாசிம் தனது முயற்சியில் இன்னுயிரை ஈந்துள்ளார். அந்த இளைஞர் குறித்து தாய்நாடு பெருமை கொள்கிறது '' என குறிப்பிட்டுள்ளார். 

எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலகிலேயே தலைசிறந்த விமான சேவையைத் தரக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு விஷயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது துல்லியமாக தரக்கட்டுப்பாட்டு கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் நிறுவனமும் கூட. 1985ம் ஆண்டு சேவையைத் தொடங்கிய இந்த நிறுவனத்தின் விமான விபத்தில் ஒரே ஒரு பயணிதான் இறந்துள்ளார். துபாய் விமான நிலையமும் அப்படிதான். பாதுகாப்பு, தரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னிலையில் உள்ள ஆசியாவின் பிசியான விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இத்தகைய விபத்து ஏற்படுள்ளது அமீரக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய இந்த விமானம் 13 ஆண்டுகள் பழமையானது. விபத்து குறித்து உடனடியாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானத்தின் தலைமை பைலட் 7 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக விமானம் ஓட்டிய தேர்ந்த அனுபவம் கொண்டவராம். விமானம் தரையிறங்கிய போது லேண்டிங் கியர் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால் விமானத்தின் டயர்கள் சில வெளியே வராமல், விமானம் அப்படியே ரன்வேயில் இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது. லேண்டிங் கியர் வேலை செய்யாதது குறித்து, பைலட்டுகள் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கவில்லையாம். ஒருவேளை தகவல் அளித்திருந்தால் தரையிறங்க வேண்டாமென்று உத்தரவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பின், விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரிய வரும். 

மிகப் பெரிய விபத்து ஏற்பட்டும் அத்தனைப் பயணிகளும் உயிருடன் பத்திரமாக காப்பாற்றப்பட்டதற்கு துபாய் விமான நிலையத்தில் நடந்த துரித செயல்பாடுகளே காரணம் என எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -