வந்தது வசந்தம் சிறுகதைத் தொகுதி மீதான பார்வை..!

சிறுகதைகளின் போக்கு ஒருவருக்கொருவர் மாறுபட்டதாக காணப்படும். சிலரது கதைகள் சாதாரண கற்பனைகளாகவும் சில அபரிமிதமான கற்பனைகளாகவும் சில யதார்த்த பூர்வமானதாகவும் காணப்படும். அதை கதாசிரியரே முடிவு செய்கின்றார். எவ்வாறான போக்குகள் கொண்டவையானாலும் கதையின் கரு மனதுக்கு இதமளிப்பதாகவோ, சிந்தனைக்கு வித்திடுவதாகவோ, மக்களுக்கு படிப்பினையாகவோ இருக்கும் பட்சத்தில் அக்கதை வெற்றி பெற்றுவிடுகின்றது.

நஸீலா ஸித்தீக் எழுதியிருக்கும் வந்தது வசந்தம் என்ற சிறுகதைத் தொகுதியில் அமைந்துள்ள கதைகள் உண்மையின் சொரூபமாகக் காணப்படுகின்றன. அவர் எடுத்துக்கொண்ட கரு, சமுதாயத்தில் அன்றாடம் நடக்கின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. 56 பக்கங்களைக் கொண்டமைந்த இத்தொகுதியில் ஏழு கதைகள் காணப்படுகின்றன. வடிவமைப்பில் சிறிய புத்தகமாக இருந்தபோதிலும் உள்ளடக்கம் சிறப்பாக காணப்படுகின்றது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் ஆசிரிய ஆலோசகர் ஏ.ரீ.எம். நிஜாம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

`பழமையான இலக்கியப் பாரம்பரியமிக்க முஸ்லிம்களின் இலக்கியப் பணியில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவானது எனக் கூறலாம். இக்கூற்றானது முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் உருவாகவில்லை அல்லது கலா ரசனை இல்லாதவர்கள் என்பதில்லை. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இலைமறை காய்களாக உள்ளனர். பாடசாலை மட்டங்களிலும், தேசிய மட்டங்களிலும் பரிசுகளை வென்றதோடு ஊக்கப்படுத்த யாருமில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்'.

எனவே நூலாசிரியரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நூல் வெளிவர உதவி புரிந்த புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள்; பாராட்டப்பட வேண்டியவர். 

இன்று ஆன்மீகம் என்ற சொல் வெறும் வார்த்தையாக இருக்கின்றதே தவிர அது வாழ்க்கையாக மாறவில்லை. தான்தோன்றித்தனமாக வாழ முற்படும் பலர், இறைவன் தமக்கு அளித்துள்ள அருட்கொடைகள், செல்வங்கள் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதை அலட்சியமாகக் கொள்கின்றனர். ஊனமுற்ற ஒருவரைக் கண்டாலோ அல்லது தாங்க முடியாத ஒரு வேதனை வந்தாலோ இறைவனின் பேரருளை வேண்டும் பலர், அதன்பின் அதை அசட்டையாக விட்டுவிடுகின்றார்கள். மார்க்க விடயங்களில் பேணுதலாக இருக்கத் தவறிவிடுகின்றனர். பாவத்தை செய்வதை நாகரீகம் என்று கருதிக்கொள்கின்றனர். 

வந்தது வசந்தம் (பக்கம் 08) என்ற சிறுகதை ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. இக்கதையில் வரும் றுஸ்லி என்ற பெண்ணின் கணவன் அனஸ் மார்க்க விடயங்களைக் கடைப்பிடிப்பதில் அலட்சியமாக செயற்படுகின்றான். நேரத்துக்கு தொழுமாறு மனைவி றுஸ்லி கூறினால் அவளுக்கு ஏசுவான். அவள் குர்ஆனை சத்தமிட்டு ஓதினால் தூக்கம் கலைகிறது என்று கூறி அவளை அப்பால் போகச் சொல்லுவான். இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு போக்கு அவனிடம் காணப்பட்டாலும் அவன் அடிப்படையில் நல்லவன். மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவன். முழுமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை நாளெல்லாம் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்பதும், தமக்கு பிறக்கப் போகும் குழந்தைக்காக செல்வம் சேர்க்க வேண்டும் என்பதும்தான் அவனது குறிக்கோள். அதனால் தர்மம் செய்வதை அவசியமற்றது எனக் கருதி வந்தான்.

றுஸ்லி தன் பொறுமையாலும், தொழுகையாலும் அல்லாஹ்விடம் உதவி கேட்கிறாள். அவன் திருந்திவிட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுகிறாள். றுஸ்லி பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அனஸ் ஒரு கனவு காண்கின்றான். அதில் பாம்புகள் அவனைத் துரத்துவதாகவும், கீழே நிலமெல்லாம் இரத்த வெள்ளமாக இருப்பதாகவும், பாம்பு அவனைக் கொத்த வருவதாகவும் கண்டு அவன் இறைவனிடம் மன்னிப்பு கோருவதாகவும் காண்கின்றான்.

அதிர்ச்சியடைந்து கண்விழித்துப் பார்த்த அனஸ் சிந்தை தெளிந்து இனிமேல் இறைவனின் சொற்படி நடக்க வேண்டும் எனவும், மனைவிக்கு பிடித்த கணவனாக இருக்க வேண்டும் எனவும் தன் மனதை மாற்றிக்கொள்கின்றான் என்று கதை முடிவடைகின்றது.

அவள் பெறும் பட்டம் (பக்கம் 16) என்ற கதை கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டியதொன்றாகும். இன்று கல்விக்காக என்றும், தொழிலுக்காக என்றும் பலர் வீட்டை விட்டு விடுதிகளில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. அவ்வாறு வீட்டைவிட்டு செல்பவர்கள் பிற நண்பர்களிடம் அவதானமாக இருக்க வேண்டும். பெற்றோரும் தம் பிள்ளைகள் பற்றியும், பிள்ளையுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் பற்றியும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டில் செல்லமாக வளர்ந்தவர்கள், விடுதிகளில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு விடயத்துக்கு சற்று கடுமையாக பேசிவிட்டாலும் கூட மனமுடைந்து போவார்கள். அதுபோல பல்கலைக் கழகங்களில் நடைபெறும் பகிடிவதையாலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் படிப்பே வேண்டாம் என்றுவிட்டு ஊரோடு வந்து சேர்ந்துவிடுகின்றார்கள். 

இந்தக் கதையில் வருகின்ற ரிஸானா என்பவள் மௌலவியா ஆகுவதற்காக கலாசாலை விடுதிக்கு வருகின்றாள். அவளது அறையில் உள்ள நண்பிகள் எதற்கெடுத்தாலும் அவளைக் குறை கூறுவதாகவும், ஏசுவதாகவும் இருக்கின்றார்கள். ஒரு சிலர்தான் அவளை அன்புடன் ஆதரிக்கின்றார்கள். ஆனால் ரிஸானா மென்னுள்ளம் கொண்டவள் என்பதால் அவளால் அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் போகின்றது. காலவோட்ட நகர்வால் அவளது போக்கு மாறிப்போகின்றது. அதனால் அவளை வைத்தியரிடம் காட்டியபோது ரிஸானா மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றாள் என்று சொல்லப்படுகின்றது. கதையின் இறுதியில் `ஆறு மாதங்களிலேயே வெளியேறுகின்றாள். மௌலவியா பட்டத்துடன் அல்ல. மனநோயாளி பட்டத்துடன்' என்ற வரிகள் நிச்சயம் வலியைத் தந்துவிடுகின்றது.

புயலொன்று பூவானது (பக்கம் 36) என்ற சிறுகதை நண்பிகளிடம் குடிகொண்டிருக்கும் பழக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அரபுக் கல்லூரி ஒன்றுக்கு வந்து சேரும் மாணவிகளுள் ரிப்னாவும், ஸிமாராவுமே இக்கதையின் பிரதான பாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஸிமாரா படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவள். அனைவரும் அவளைத்தான் நல்ல விடயங்களுக்கு உதாரணமாகவும் கூறுவார்கள். இவ்வாறு ஸிமாராவை எல்லோரும் புகழ்வது ரிப்னாவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றது. 

திடீரென ஸிமாராவுக்கு சுகயீனம் ஏற்பட்டு வீட்;டுக்குச் சென்றுவிடுகின்றாள். எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முனைந்த ரிப்னா, ஸிமாராவைப் பற்றி ஏனையவர்களிடம் இல்லாதபொல்லாத விடயங்களை எத்தி வைக்க முனைகின்றாள். ஆனால் அங்கிருந்த ஒரு தோழி புறம் பேசுவது தன் சகோதரனின் உடல் மாமிசத்தை சாப்பிடுவதற்குச் சமம் என்ற நபிமொழியை உதாரணமாகக் காட்டி ரிப்னாவின் பேச்சை நிறுத்திவிடுகின்றாள். அவர்கள் அவள் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. ஸிமாராவின் நல்ல பண்புகளை அறிந்த அவர்களுக்கு ஸிமாராவைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால் அவர்கள் ஸிமாராவுடன் கோபம் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு ரிப்னாவின் உள்ளம் ஏதோ ஒன்றால் திண்டாடியது. அவள் தன் கனவில் யாரோ வந்து தனது சதையை சாப்பிடுவதாக உணருகின்றாள். எனவே பீதியடைந்த அவள் தன்னை விடுமாறு கனவில் கத்துகின்றாள்.

அவளது கத்துதலைக் கேட்டு ஓடி வந்த மற்ற நண்பிகள் அவளை ஆசுவாசப்படுத்துகின்றார்கள். ரிப்னா, தான் கண்ட கனவை எண்ணி பயத்துடன் காணப்படுகின்றாள். அக்கனவு ஸிமாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. எனவே அவள் ஸிமாராவிடம் நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கின்றாள். ஸிமாரா எதையும் பொருட்படுத்தாமல் மிகவும் அன்பாக அவளுடனும் பிறருடன் நடந்துகொள்வதுடன், ரிப்னா என்ற புயலையும் பூவாக மாற்றிவிடுகின்றாள். பொறாமை என்றுமே நம் மனதில் நுழைந்துவிடக் கூடாது. பொறாமை வந்துவிட்டால் புறம் பேசுதல், அவதூறு சொல்லுதல், கோள் மூட்டுதல் போன்ற அனைத்து பாவங்களை மேற்கொள்வதற்கும் அது காரணமாக அமைந்துவிடும் என்பதை இக்கதை நன்றாக தெளிவு படுத்துகின்றது.

யதார்த்த விடயங்களை ஆணித்தரமாகச் சொல்லும் ஊடகவியலாளர் சித்தீக் ஹனீபாவின் மனைவியான கதாசிரியர் நஸீலா ஸித்தீக் பாராட்டுக்குரியவர். அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வந்தது வசந்தம்
நூல் வகை - சிறுகதை
நூலின் பெயர் - நஸீலா ஸித்தீக்
வெளியீடு - ஏசியன் கிரபிக்ஸ்

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -