அலவி மௌலானா அவர்கள் இவ்வுலகைவிட்டும் மறுஉலகை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டார் என்ற செய்தி கேட்டபோது மிகுத மனவேதனையும், கவலையும் ஏற்பட்டது; இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு மூத்த அரசியல்வாதியை, தொழிற்சங்கவாதியை இன்று நாம் இழந்திருக்கின்றோம். தலைவர்களைப் பொறுத்தவரையிலும் பலவிதமான தலைவர்களை உலகிலே நாம் கண்டிருக்கின்றோம். அந்தவகையில் அலவி மௌலானா அத்தகைய தலைவர்களுள் ஒரு வித்தியாசமான தன்மை கொண்டவர்.
தொழிற்சங்கவாதியான அவர், ஆரம்பகாலம் தொட்டே சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடு நெருக்கமாக இருந்தவர். முஸ்லிம்கள் எல்லோருமே ஐக்கிய தேசியக் கட்சியோடு இருந்த யுகத்தில் இவர் வித்தியாசமான வெளிப்பாட்டைக் கொண்டிருந்தார். கொழும்பு முஸ்லிம் மக்களால் மிகவுமே மதிக்கப்பட்ட ஒரு தலைவராகவே அலவி மௌலானாவை நாம் கண்டிருக்கின்றோம்.
1998ம் ஆண்டு முதன் முதலாக ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே அவரைச் சந்தித்தேன்; பெண்கள் தொடர்பான ஒரு பருவகால சஞ்சிகையை வெளியிட்டுப் பேசிக்கொண்டிருந்தார் மௌலானா. நம்ம வீடுகளிலே ஒரு பெரிய தலைவலி இருக்கின்றது. அதனை நாங்கள் எங்களுடைய வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருக்கின்றோம், அதனால் குறிப்பாக பெண்கள் சமுதாயம் சீர்கெட்டுப்போயிருக்கின்றது. அது என்ன தலை வலி ? T.V (Tala Vali) என்று மிகவுமே நாசூக்காக தனது கருத்தை முன்வைத்தார்
கொழும்பில் 2003ம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு எதிரான ஒரு கூட்டம் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசுகின்றபோது மிகவுமே ஆவேசமாக தனது கருத்துக்களை முன்வைத்தார் மௌலானா அவர்கள்; அவர் சொன்னார் “ஏய் புஷ் முஸ்லிம்களின் ஈமானுக்கு முன்னால் நீ ஒரு ரப்பர் புஷ்” உன்னுடைய ஆயுதபலம் முஸ்லிம்களைக் கொன்றுவிடலாம், ஆனால் அவர்களது ஈமானை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. என்று பேசினார்.
இவ்வாறாக துணிச்சல் மிக்க ஒரு தலைவராகவே அவரை நான் கண்டிருக்கின்றேன், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்திலே அவருக்கு அலாதியான அக்கறை இருந்திருக்கின்றது. அடிக்கடி இது தொடர்பில் என்னுடன் பேசிக்கொள்வார். வடக்கு மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் இருந்த சமயத்தில் அவரோடு தொலைபேசியில் உரையாடி எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்வார். கட்சி பேதங்களுக்கு அப்பால் நேர்மையை வலியுறுத்தும், மக்கள் நலனை வலியுறுத்தும் ஒரு தலைவரை நாம் இழந்திருக்கின்றோம்.
அல்லாஹ் அவரது இம்மை வாழ்வை பொருந்திக்கொண்டு, மறுமையில் சிறப்பான வாழ்வை வழங்குவானாக, வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து நிற்கின்றோம்.
தகவல் என்.எம்.அப்துல்லாஹ்.