ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
1957ம் ஆண்டு தமக்கு அரசினால் சட்டப்படி வழங்கப்பட்ட காணிகளைத் தற்போது வனஇலாகா அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதாகவும், அதனை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் நிந்தவூர்ப் பிரதேச விவசாயிகள் நிந்தவூர் பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று நடாத்தினர்.
கிரான் கோமாரி விவசாயிகள் அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று நடாத்தியது.
நிந்தவூர் பிரதேச செயலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தினுள் சுலோகங்களை ஏந்திய விவசாயிகள் நின்ற நிலையிலும், அமர்ந்தவாறும் கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விவசாயிகளின் பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட அவர் 'உடனடியாக மேன்நடவடிக்கையின் பொருட்டு செயற்படப் போவதாகத்' தெரிவித்தார்.
இது பற்றி விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்:- ' முன்னாள் அமைச்சர் எம்.எம்.முஸ்தபா அவர்களின் அயராத முயற்சினால் கடந்த 1957ம் ஆண்டு பொத்துவில் கிரான், கோமாரி ஆகிய காட்டுப் பிரதேசத்தில் நிந்தவூர் பிரதேச ஏழை விவசாயிகளுக்கு ஒருவருக்கு 5 ஏக்கர் வீதம் சட்டப்படி காணி வழங்கப்பட்டது. இதனைக் காடு வெட்டி, களனியாக்கி, விவசாயம் செய்து வந்தோம். கடந்த 3 தசாப்த காலப் பயங்கரவாதத்தால் இப்பிரதேசத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை.
பயங்கரவாதம் ஒழிந்த பின்னர் எமது காணிகளுக்குள் நாம் மீண்டும் விவசாயம் செய்ய வந்தோம். இராணுவத்தினரும், வனஇலாகா அதிகாரிகளும் தடுக்கின்றனர். இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்' எனத் தெரிவித்தனர்.