அப்துல்சலாம் யாசீம்-
உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளையினர் திருகோணமலை டயலொக் பீஎல்சீ நிறுவனத்தின் அனுசரணையுடன்; மஹதிவுல்வெவ மகாவித்தியாலயத்தில் இரத்ததான நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.
இதில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளையின் தொண்டர்களும், திருமலை பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியைச் சேர்ந்த டாக்டர் மதன், மொறவெவ- பன்குளம் மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் ரொஷான் ஞானகுணாளன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திருகோணமலைக் கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரவிச்சந்திரன், திருமலை டயலொக் நிறுவனத்தின் அதிகாரி திரு லெனார்ட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட இம் மனிதாபிமான நிகழ்வில் பிரதேசப் பொதுமக்களும், விமானப் படையினரும், சிவில் பாதுகப்புப் படையினரும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
1901க்கு முன் இரத்தத்தின் வகைகள் எவை என்பது யாருக்கும் தெரியாது. 1901இல் கார்ல் லாண்ட்ஸ்டெயினர் (Karl Landsteiner) என்பவர் தான் இரத்த வகைகள் உண்டெனக் கண்டுபிடித்தவர். அவர் முதலில் A,B,C என்ற மூன்று வகையான இரத்தப் பிரிவுகள் இருக்கின்றன எனக் கண்டு பிடித்தார். 1902இல் நான்காவது இரத்த வகையான A,B என்ற பிரிவினையும் கண்டுபிடித்தார். மூன்றாவது வகையான ஊ என்ற இரத்தப் பிரிவு காலப் போக்கில் O எனப் பெயர் மாற்றப்பட்டது.
இரத்தத்தில் இத்தனை வகை உண்டு எனக் கண்டுபிடித்த இந்தக் கார்ல் லாண்ட்ஸ்டெயினர் பிறந்தது 1868 ஜுன் மாதம் 14ம் திகதி அன்றாகும். எனவே தான் அவரை கௌரவிப்பதற்கும், நினைவு கூருவதற்குமாக ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 14ம் திகதியை உலக இரத்த தான தினமாக அனுஷ் டிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பினரால் 2005ம் ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 14ம் திகதியன்று உலக இரத்த தான தினமாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருவதுடன் உலகளாவிய ரீதியில் இரத்த தான நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன என டாக்டர் என். ரவிச்சந்திரன் தெரிவித்தார்.