காத்தான்குடி- அல்-மனார் நிறுவனம் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டிக்கான வினாக்கொத்துகள் விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்புனித மாதத்தில் குர்ஆன், ஹதீதுகளுடன் தொடர்பு பட்ட ஒரு சமூக குழாமொன்றை உருவாக்கி அதன் பலனை அவர்களது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழும் உயரிய பணி இதனூடாக கட்டியெழுப்பும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது இரண்டாவது தடவையாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தி ஜீவிகளது ஆலோசனைகள் பெறப்பட்டு புதுப்பொலிவுடன் கிழக்கு மாகாண மட்டத்தில் இப்போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வினாக்கொத்துக்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கென மாவட்டம் தோறும் முக்கிய பிரதேசங்களிலுள்ள வியாபார ஸ்தலங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஏறாவூர் பிரதேசத்தில் அறிவு நூல் நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வினாக்கொத்தினை பெற்று பதில்கள் பூர்த்தி செய்யப்பட்டு எதிர்வரும் 03.07.2016 ஆம் திகதிக்கு முதல் புதிய காத்தான்குடி, கடற்கரை வீதி, அல் மனார் நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஒப்படைக்க முடியும்.
இப்போட்டியில் வெற்றியீட்டும் 13 பேர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் 100 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது.