இனிய நோன்பின் பகல்களும், இருளகலும் இரவுகளும்.
****************************************
இஸ்லாத்தின் கடமை செய்ய இருளகலும்
ஈமானை சலவை செய்ய துயர் விலகும்
வருடத்தில் "ரமழானாய்"வந்து போகும்
வரவேற்போம் புனிதமாய் சேர்ந்துநாமும்
மகத்துவம் தாங்கியது மான்பின் நோன்பு
மறுபடியும் துவங்கியது மகிழ்வாய் ஓம்பு
விரதத்தில் கழித்திடும் பகல்கள் உனக்கு
விழித்து நீ பிரார்த்தித்தால் தீரும் பிணக்கு
00
மறுமைக்கும்,பொறுமைக்கும் தராசு நோன்பு
வறுமையாய் நோற்கார்க்கு தராது மான்பு
இடைபோட படிக்கல்லாய் இருக்கும் தீன்கள்
இறையச்சம் படிந்தவராய் இருப்போம் நாங்கள்
ஆண்டிலொரு மாதமாழ இறைவனின் பால்
அடியோர்கள் தவம்செய்து இருக்கக் கண்டால்
வேண்டுகிற தட்டுகளை"அல்லாஹ்"பார்த்து
வேதனத்தை தந்திடுவான் நல்லா சேர்த்து
00
"குர்ஆனை" கொடையளித்த புனித மாதம்
கூட்டாக இணைந்தோதி படிப்போம் வேதம்
பாவத்திற்கு துணைபோகா வழியில் நேர்ந்து
லாபத்திற்கு ஏற்றபடி ‘ஸக்காத்’கோடை ஈர்ந்து
தவறாது நோன்பதனை தக்கபடி நோற்று
தராவிஹும் தஹஜ்ஜத்தும் வித்ரும் சேர்த்து
ஐய்வேளை தொழுகையோடு அலங்கரிப்போம்
ஐயமது உள்ளவராய் இறை வழிநடப்போம்
00
பொய் சொல்லி நோன்பதை புறக்கணியாது
புறம்பேசி அடுத்தவரின் குறை கழுவாது
எத்துயர்தான் வந்திடினும் இறையோன் ஏவல்
எடுத்தியம்பி இரவு,பகல் இரஞ்சுவாயானால்
அத்தனையும் பதரற்ற நெல்லின் பயிராய்
‘அல்லாஹ்’வின் வெளியிலே விளையும் சரியாய்
சத்தியத்தின் மார்க்கத்தின் சுவர்க்கம் உண்மை
சந்நிதியில் மகிழ்வடைய சேர்ப்போம் நன்மை.
00
__ரோஷான் ஏ.ஜிப்ரி.__