ரமழான் வருகிறது
++++++++++++++
அஞ்சி வாழு என்பது
கஞ்சி வாளி என்றே
காதுகளில் விழும்
இருபதும் எட்டும்
இருபத்து எட்டு நாளுக்கு மேல்
இருப்புக்காய் போராடும்.
உண்ணாட்டுப் பிறை
உண்ணாதிருக்க
சர்வதேசம்
சர்பத் குடிக்கும்.
சர்வதேசம்
சஹர் செய்ய
உண்ணாடு
உறக்கத்தில் இருக்கும்.
ஒற்றை இரவில்
உள்ள பாவமெல்லாம்
போமற் பண்ணி
புண்ணியவனாக
ரெடியான கூட்டம்
விடிய விடிய முழிக்கும்.
அன்றொய்ட்களில்
அல்குர் ஆன்
பதிவிறக்கி
பார்க்கப் படாமல் இருக்கும்
பேக் ஐடி முப்திகளின்
பேஷ்புக் பத்வாக்களால்
முகனூலுக்கு
மூச்சுத் திணறும்
வெள்ள நிவாரணத்தில்
விலகிய இயக்க வாதம்
மீண்டும் தலை தூக்கி
மெல்லப் படமெடுக்கும்
இத்தனையும் தாண்டி
இன்னுமொரு கூட்டம்
அல்லாஹ்வின் அன்புக்காய்
அழுது பிரார்த்திக்கும்.
-முஹம்மட் நிஸவ்ஸ்-