அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சகோதரர்களே! சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்!
அண்மையில் எமது நாட்டின் மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தில் துயருற்றிருக்கும் மக்களின் வேதனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதோடு, புனித ரமழான் மாதம் அண்மித்து வரும் இவ்வேளையில் எமது சகோதர சகோதரிகள் முகம்கொடுத்துள்ள இந்தப் பாரிய அனர்த்தத்திற்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ரமழான் மாதத்தை முறையாக அனுஸ்டிக்கக் கூடிய வகையில் உதவி வழங்கும் பாரிய வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத் தேவை குறித்து நான் உங்களின் மேலான கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.
தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிவாரண நடவடிக்கைகளில் உலர் உணவுப் பொருட்கள், உடைகள், மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றை பல்வேறு அமைப்புக்களும், தனிநபர்களும் முன்னின்று செய்து வருகின்றனர். மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு இரவு பகலாக உழைக்கும் அத்தனை பேருக்கும் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நன்றி கூறுகிறேன்.
அரசாங்கத்தின் மூலம் கிடைக்கக் கூடிய உதவி, ஒத்தாசைகளையும் மற்றும் நஷ்ட ஈடுகளையும் மக்களுக்கு கூடிய விரைவில் பெற்றுக் கொடுக்கும் அயராத முயற்சியிலும் மக்களின் பிரதிநிதியென்ற வகையில் நான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
தற்போது நடைபெற்று வருகின்ற சகல நிவாரண பணிகளுக்கும் மேலதிகமாக எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முறையாக அனுஸ்டித்து அதன் பலாபலன்களை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆதரவின்றித் தவிக்கும் எமது உடன்பிறப்புக்களான சகோதர சகோதரிகளின் ஒவ்வொரு குடும்பத்தினையும் வெள்ளம் பாதிக்காத பகுதிகனில் வாழும் முஸ்லிம்கள் பொறுப்பெடுத்து ஆதரித்து அரவணைக்க வேண்டிய கட்டாயக்கடைமையை எமது சமூகம் பொறுப்பெடுக்க வேண்டிய அவசியத் தேவையை நான் உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்;.
பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு ரமழான் மாதத்தை எவ்வித குறைகளுமற்ற நிலையில் அவர்களது நோன்பின் கடமைகளை நிறைவு செய்வதற்காக பண உதவி ஒன்றை செய்வது அவசியமென்று நான் கருதுகின்றேன்.
ரமழான் மாதத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது ரூபா 20,000 பணத்தை எமது சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்டுள்ள அக்குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடொன்றின்; மூலம் அவர்களின் பொருளாதார பிரச்சினைக்கு சிறிய அளவிலாவது ஒரு பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதனை நான் உறுதியாக நம்புகின்றேன்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல்லாயிரமாக பெருகியிருக்கின்றது என்பதனை நீங்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள். அவர்களில் மிகவும் கஸ்டத்தை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு இந்த உதவி பேருதவியாக இருக்கும் என்பதில் கருத்துவேறுபாடில்லை. எனவே இத்தகைய நிர்க்கதியான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உதவி புரியக் கூடிய அன்புள்ளங்களை நாடியும் தேடியும் நான் இந்தக் கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றேன்.
என் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு துறைசார்ந்த முஸ்லிம் புத்திஜீவிகளை உள்ளடக்கிய கொழும்பு மாவட்ட அபிவிருத்திக்கான எனது ஆலோசனை நிறுவனமான Colombo District Development Foundation [CDDF] என்ற நிறுவனம் பாதிக்கப்பட்ட சுமார் 5000 குடும்பங்களின் தரவுகளை இதுவரை ஆவணப்படுத்தியுள்ளது.
இக்குடும்பங்களில் மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ரமழானில் வாராந்தம் தலா 5000 ரூபாவாகவோ அல்லது முழுமாதத்திற்குமான செலவாக 20,000 ரூபாவையோ வழங்கக்கூடிய அன்புள்ளம்கொண்ட தனவந்தர்களின் உதவியை நான் தற்பொழுது வேண்டி நிற்கின்றேன்.
இந்த திட்டத்திற்காக எங்களது [CDDF] பணியகம் யாரிடமிருந்தும் பணத்தை நேரடியாக பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முறையை தவிர்த்துக்கொண்டு பண உதவி வழங்குபவர் நேரடியாகவே குறித்த குடும்பத்தினருக்கு அவர்களின் வங்கிக் கணக்கின் ஊடாக பணம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.
மேற்படி திட்டத்தில் பண உதவி வழங்குபவரையும் உதவி பெறும் குடுமபத்தையும் இணைக்கும் ஓர் இணைப்பாளராகவே எமது [CDDF] பணியகம் செயற்படும்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக இப் பணியகம் தனது தற்காலிக செயற்பாட்டு அலுவலகத்தை [Operation Room] கொழும்பு-03; கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள டீன்ஸ்டன் பிலேஸில் டீன்ஸ்டன் ஹவுஸ் கட்டிடத்தில் 03ம் மாடியில் திர்வரும் தலைப்பிறை காணும் வரை கொண்டு நடாத்தவுள்ளது.
ரமழான் மாதத்திற்காக மாத்திரம் உதவும் அல்லாஹ்வின்; பொருத்தத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்த அதிவிஷேட வேலைத்திட்டத்திற்கு உதவி வழங்க விரும்பும் சகல தனி நபர்களும், நிறுவனங்களும், இஸ்லாமிய இயக்கங்களும், பள்ளிவாசல் சம்மேளனங்களும், வெளி நாடுகளில் வாழும் எமது உடன்பிறப்புகள் எல்லோரும் மேற்படி நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நன்மைபயக்கும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளவும் உதவி புரியவும் உங்கள் அன்புக்கரங்களை நீட்டுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
உதவி புரிய ஆர்வமுள்ள சகலரும் [CDDF] பணியகத்துடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு நீங்கள் பண உதவி புரிய விரும்பும் வெள்ள அணர்த்த்ததால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களையும் அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களையும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மேற்கூறிய பண உதவி புரிந்து ஈருலகத்திலும் பாக்கியம்பெற்ற கூட்டத்தினரில் இணைந்து கொள்ளுமாறு வல்ல அல்லாஹ்வின் பெயரால் உங்கள் அனைவருக்கும் அன்பாக அழைப்பு விடுக்கின்றேன்.
தொடர்புகொள்ள வேண்டிய [CDDF] பணியக தொலைபேசி இலக்கங்கள் -011-3443199/ 011-7907838. email: cddflk@gmail.com facebook: www.facebook.com/cddflk
அல்லாஹ்வின் பொருத்தத்தையும் உங்கள் அன்பையும் என்றும் நாடியவனாக,
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின்
இணைத்தலைவருமான,
முஜிபுர் றஹ்மான்.

