எம்.வை.அமீர்-
எதிர்வரும் 24.05.2016ம் திகதி நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது அம்பாறை,கல்முனை காணிப்பதிவகங்களின் நிருவாக எல்லையினை மக்களின் நன்மை கருதி பன்முகப்படுத்துமாறு பிரேரணை ஒன்றையும் கேள்வி நேரத்தின்போது முக்கியத்துவம் மிக்க கேள்விகள் சிலவற்றையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் முன்வைக்கவுள்ளார்.
இதில் அம்பாறை மாவட்டத்தின் காணி மற்றும் ஆவணப் பதிவுக்கான காணிப் பதிவகங்கள் கல்முனை நகரத்திலும் அம்பாறை மாவட்ட செயலகத்திலும் அமையப்பெற்று மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றன. உள்நாட்டு அலுவவல்கள் அமைச்சின் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் அமையப் பெற்றுள்ள கல்முனை காணிப் பதிவகத்தின் நிருவாக எல்லைகள் வடக்கே மருதமுனை, தெற்கே திருக்கோவில், மேற்கே இறக்காமம் வரை வியாபித்துள்ளன.
இதனால் மக்களும் சட்டத்தரணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொத்துவில் பிரதேசம் அம்பாறை காணிப்பதிவகத்தின் நிருவாக எல்லையின் கீழ் அமையப் பெற்றுள்ளமையானது அதே அசௌகரியத்தை மக்களுக்கும் சட்டத்திரணிகளுக்கும் தோற்றுவித்துள்ளது.
ஆகவே பொத்துவில், கோமாரி, தம்பிலுவில், இறக்காமம், ஒலுவில்,பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற எல்லைகளைக் கருத்தில் கொண்டும் மக்களின் தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடனும் நீதிமன்றங்கள் அமையப்பெற்றுள்ள அக்கரைப்பற்று மாநகரில் ஓர் தனியான காணிப்பதிவகம் பன்முகப்படுத்தப்படுவது காலத்தின் மிக மிகத் தேவையான ஒன்றாகும். என்ற விடயத்தை முன்வைக்கவுள்ளார்.
இதேவேளை கேள்விக்கு பதிலளிக்கவேண்டி பின்வரும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
1.கிழக்குமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அரச முன்னுரிமை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் 1999.05.17ம் திகதி முதல் நூலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு சேவையாற்றி 2000.05.16ம் திகதி முதல் பாடசாலை முகாமைத்துவ உதவியாளர்களாக மாற்றப்பட்டு சேவையாற்றி 2006.07.24ம் திகதி ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டு ஆசிரியர்களாக கடமையாற்றிவருபவர்கள் எத்தனைபேர் உள்ளனர்?
2. இவர்கள் நூலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் முகாமைத்துவ உதவியாளர்களாகவும் சேவையாற்றிய காலப்பகுதியில் கற்பித்தல் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டடிருந்தனர் என்பதனைதாங்கள் அறிவீர்களா?
3. இவ்வாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையாற்றிய காலப்பகுதி வேறு மாகாணங்களில் ஆசிரியர் சேவைக் காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைதாங்கள் அறிவீர்களா?
4. இவர்கள் நூலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் முகாமைத்துவ உதவியாளர்களாகவும் சேவையாற்றிய காலப்பகுதியினை ஆசிரியர் சேவைக்காலத்துடன் சேர்ப்பதற்கு 2013.04.03ம் திகதிநடைபெற்ற 2013ம் ஆண்டிற்கான அமைச்சர் வாரியத்தின் 02 கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை தாங்கள் அறிவீர்களா?
5. இத் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தங்களால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லையாயின் ஏன்?
என்பனபோன்ற கேள்விகளையும் முன்வைக்கவுள்ளார்.