நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் 29 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும் அதிகமான பாடசாலை மாணவர்கள் தங்களது உடமைகளையும் பாடப்புத்தகங்களையும் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;
நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கின் காரணமாக பாடசாலை மாணவர்கள் தங்களது உடமைகளையும் பாடப்புத்தகங்களையும் இழந்துள்ள நிலையில் அவர்களின் கல்வி செயற்பாடுகள் முற்று முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது வரை வெள்ளபாதிப்புக்கள் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் 28 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
இந்த உயிரிழப்பானது அதிகளவு கொழும்பு மாவட்டம் உட்பட சப்ரகமுவ மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது.
குறிப்பிட்டு கூறுவதாயின் கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர் ஒருவரும் சப்ரகமுவ மாவட்டத்தில் 28 பேருமாகவே இந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இதனிடையே இந்த அனர்த்தம் காரணமாக நாடளாவிய ரீதயில் 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் முற்று முழுவதுமாக சேதமடைந்துள்ளன. இவ்வாறு பாதிப்படைந்த பாடசாலைகளை மீளவும் கட்டியெழுப்புவதன் மூலமே மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை உரியவகையில் முன்னெடுக்க முடியும்.
இவ்வாறான நிலையில் கல்வி அமைச்சின் கீழ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களை திரட்டவும் நிவாரண செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கவும் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிவாரண குழுவானது பாதிப்புக்கள் தொடர்பிலான முழூமையான தகவல்களை திரட்டி வருகின்றது.
அந்தவகையில் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களுக்கான அனைத்துவிதமான பாடப்புத்தகங்கள், புதிய சீருடைகள், சப்பாத்துக்கள், உட்பட சான்றுதல்கள், பெருபேறு சான்றுதல் என்பன உரிய முறையில் மாணவர்களுக்கு மீண்டும் பெற்றுதர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.