பி.எம்.எம்.ஏ.காதர்-
வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவகளில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் சரியாக இனங்கானப்படவில்லை எனத் தெரிவித்து கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம்' (FEMCO) சார்பில் அதன் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழர் அரசியல் கட்சிகளாலோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சிகளாலோ இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வுத் திட்டமொன்று இதுவரை முன்வைக்கப்படாத நிலையில் வடமாகாண சபை முந்திக்கொண்டு அவ்வாறான தொரு தீர்வு முன்மொழிவுகளை வெளியிட்டிருப்பது கவனத்திற்குரிய விடயமாகும்.
ஆனால் அத்தீர்வுத் திட்ட முன்மொழிவுகளில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் முறையாக உள்வாங்கப்படவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். குறித்த தீர்வுத்திட்டத்தில் பின்வரும் இரண்டு விடயங்கள் முஸ்லிம்களால் ஏற்றக் கொள்ளப்பட முடியாதவைகளாகும்.
இலங்கையானது பெரும்பான்மையாக தமிழ்பேசும் பிரதேசங்களைக் கொண்ட வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் மற்றும் பெரும்பான்மைச் சிங்களம் பேசும் பிரதேசத்தைக் கொண்ட ஏனைய ஏழு மாகாணங்கள் மற்றொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தல் வேண்டும்.
வட, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஓர் அலகாகவும், மலையகத் தமிழர் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்படவேண்டும்.
இலங்கையை இரண்டு மாநிலங்களாகப் பிரித்தல் என்ற கோரிக்கையானது மறைமுகமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஒரு நடவடிக்கையகவே கிழக்கு முஸ்லிம்கள் நோக்குகின்றனர். வடக்குடன் கிழக்கை வலிந்து இணைக்கும் எந்த நடவடிக்கைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் எதிர்ப்புக்கள் வலுவடைந்துள்ள நிலையில் அதனைத் தணித்து, தமது அரசியல் அதிகார இலக்கை வேறுவிதமாக அடைந்து கொள்ள தமிழர் தரப்பு முயற்சிக்கின்றது என்ற நியாயமான அச்சம் இதன்மூலம் முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
கிழக்கை வடக்குடன் இணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுவதற்கோ, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்று பிரகடனம் செய்வதற்கோ வடபுலத் தமிழர்களுக்கும் வடமாகாண சபைக்கும் எந்த விதமான தார்மீக உரிமையுமில்லை. கிழக்கிலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்க்ள 39.79 வீதத்தைக்கொண் ஒரு சிறுபான்மையினர் என்பதையும் கிழக்கின் மூன்று மாவ்டங்களில் இரண்டில் தமிழர் சிறு பான்மையினர் என்பதையும் தமிழர்தரப்பு எப்பொழுதும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.
கிழக்கில் சிறுபான்மையினரான தமிழர்கள், தனது இனத்தை பெரும்பான்மையினராகக் கொண்ட வட மாகாணத்துடன் இணைவதன் மூலம் அங்குவாழும் ஏனைய இனத்தவரை சிறுபான்மையினராக்கி அவர்கள் மீது அதிகார மேலாதிக்கத்தை பிரயோகிக்க முனையும் ஒரு மறைமுக முயற்சியாகவுமே இது கருதப்படவேண்டும். மற்றப்படி, முஸ்லிம் தன்னாட்சிப்பிராந்திய அலகு என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்றதும் இனமுரண்பாட்டை கூர்மையடையச் செய்வதற்குமான யோசனைகளேயன்றி வேறில்லை.
மாகாணங்களுக்கு சமஸ்டி என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ உச்ச அதிகாரம் வழங்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. முஸ்லிம்களின் கோரிக்கையும் அதுதான். ஆனால் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்பதுதான் பிரச்சினையாகும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வடக்குடன் கிழக்கை இணைக்கும் முயற்சிக்கு கிழக்கின் முஸ்லிம் சமூகம் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்பதை தமிழர் தரப்புக்கு மாத்திரமல்ல முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகின்றோம்.
வட, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஓர் அலகாகவும் மலையகத் தமிழர்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவின் மூலம் தமிழர் தரப்பு இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்பையும் அடையளத்தையும் அவர்களது பூர்வீக உரிமையையும் தவறாகவே மதிப்பிட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பூர்வீகத்தைக் கொண்ட முஸ்லிம்களை 150வருட வரலாற்றைக் கொண்டதும் பிரித்தானியரால் பெருந்தோட்டங்களுக்கு தருவிக்கப்பட்டவர்களுமான மலையக சமூகத்துடன் ஒப்பிட்டிருப்பதானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். நாம் இதன் மூலம் மலையகத் தமிழர்களை அகௌரவப்படுத்தவில்லை அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகள் என்ற கௌரவத்தையும் அவர்களது உரிமைகளையும் பெரிதும் மதிக்கின்றோம், ஆனால் முஸ்லிம் சமூகத்தை மலையகத் தமிழர்களுடன் ஒப்பிட்டு அவர்களது பூர்வீகத்தைத கொச்சைப்படுத்தும் நடவடிக்கையையு கண்டிக்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
