அபூ செய்னப்-
மனிதநேயமிக்க அரசியல் வாதிதான் பிரதி அமைச்சர் அமீர் அலி.அவரின் சேவைகள் இனமத பேதங்களை தாண்டியது என முன்னாள் பிரதியமைச்சரும், பட்டியிருப்பு தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளரும், கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் பதினாலு மில்லியன் ரூபா செலவில் களுவாஞ்சிக்குடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்துமிட திறப்புவிழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்
இந்த பேருந்து தரிப்பிட நிலையமானது பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களின் இன மத பேதமற்ற மனிதநேயமிக்க அளப்பெரிய சேவையாகும். இதனை இந்த தமிழ் பிரதேசத்தில் அமைப்பதற்கு பதிலாக அவர் முஸ்லிம் பிரதேசங்களில் அமைத்திருக்க முடியும்.
இந்த பேருந்து தரிப்பிடமானது ஏறாவூரிலோ, ஓட்டமாவடியிலோ அல்லது காத்தான்குடியிலோ அமையவில்லை மாறாக தமிழர்களின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ளது. இனவாதம் பேசி,மதவாதம் பேசி காலங்காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடகம் நடத்தியவர்களுக்கு, இவ்வாறான அபிவிருத்திப்பணிகளை சகிக்க முடியாது தான். அவர்கள் காலங்காலமாக இனவாதம் பேசியே காலத்தை கடத்துகிறார்கள், ஒருசிலர் தமிழர், முஸ்லிம்களுக்கு மத்தியில் விரிசலை உண்டு பண்ணி தமது அரசியல் ஸ்தீரத்திற்கு வழி தேடுகிறார்கள். மக்கள் இதனை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.
எம்மோடு இணைந்து வாருங்கள், இன்னுமின்னும் தமிழ் மக்களை ஏமாற்றும் சக்திகளுக்கு விடைகொடுங்கள், உங்கள் பிரதேசத்தை கல்வியினாலும், அபிவிருத்தியினாலும் நாம் முன்னேற்றம் அடையச்செயவோம். எல்லா இன மக்களையும் அனுசரித்து, அன்னியோன்யமாக பழகி அவர்களின் குறைகளை தீர்க்கின்ற விடயத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் முன்னிற்கிறார். நாம் கேட்டவுடன் இந்தப்பிரதேசத்தின் வரிய மக்களின் நன்மை கருதி ஒரு சதொச வை பெற்றுத்தந்தார்,
இப்போது இந்த பேருந்து தரிப்பிடம் இவ்வாறு தமிழ் மக்களின் நன்மை கருதி பல அபிவிருத்திப்பணிகளை முன்னின்று செய்கின்ற அவரை ஒரு தூய்மையான அரசியல் சக்தியாகவே பார்க்கிறேன்.
இந்தப்பிரதேசத்தில் உள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதில் பெரும்முயற்சி செய்கிறார். இவ்வாறான மனிதநேயமிக்க அரசியல் வாதிகளினால் மட்டுமே பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். மாறாக இனவாதிகள் எப்போதும் சுயநலமாகவே செயல்படுவார்கள் என கூறினார்.