பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் பெற்றோல் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதமமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்தது எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வடபிராந்திய பணிமனை தெரிவித்தது.
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த இரண்டு நாட்களாக பரவிய வதந்தி காரணமாக, யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூடினர். யாழ். நகரைத் தவிர்ந்த, ஏனைய இடங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் பெற்றோல் இல்லை என்ற வாசகம் பொருத்தப்பட்டது.
இது தொடர்பில் வடபிராந்திய பணிமனையின் அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, ‘சித்திரை வருடப்பிறப்புடன் நீண்ட விடுமுறையொன்று விடப்பட்டது. இதனால் பெற்றோலிய ஊழியர்கள் பலர் விடுமுறையில் சென்றிருந்தனர். இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோலை சீராக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், தற்போது அநுராதபுரத்திலிருந்து பெற்றோல் கொண்டுவரப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை (25) மாலைக்குள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் பெற்றோலைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். நாட்டின் பல இடங்களிலும் இவ்வாறானதொரு தாமதம் ஏற்பட்டது’ என அவர் மேலும் கூறினார்.