முகம்மத் இக்பால்- சாய்ந்தமருது
வன்னி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல் முஸ்லிம்களின் ஆடம்பரப் பிரச்சினைகள்மீது முதலைக் கண்ணீர் வடிக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
கடந்த வாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார். அமைச்சர் என்ற வகையில் அவரது அமைச்சுக்குட்பட்ட சதொச கடைகளை திறந்துவைத்ததுடன், அவரது கட்சியின் பல நிகழ்வுகளை இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் காலத்திலிருந்தே இப்பிரதேசங்களில் சத்தோஷ நிறுவனம் திறக்கப்படுவதும், பின்பு சில மாதங்களில் அது காணமல் போவதும் வழக்கமாகும். அதுபோல் இன்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்ட சதொச நிறுவனம் எவ்வளவு காலங்களுக்கு நீடிக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
அமைச்சரின் அம்பாறை விஜயத்தினை வழமைபோன்று அவரது ஆஸ்தான ஊடகங்கள் முக்கிய செய்தியாக பிரசுரித்திருந்தது. அதிலும் இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டதாகவும், இம்மாவட்ட மக்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவர்களுக்குரிய அபிவிருத்திகள் ஒன்றும் ரவுப் ஹக்கீமினால் செய்யப்படவில்லை என்றும், இதனால் தான் விசனமடைவதாகவும், தலைமைத்துவத்துக்கு ரவுப் ஹக்கீம் தகுதியில்லை என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியதாக பல செய்திகள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
மக்களுக்குரிய பிரச்சினைகளும், அபிவிருத்திகளும் இரண்டு வகைப்படும். அதில் முதலாவது அத்தியாவசிய பிச்சினை. இரண்டாவது ஆடம்பரப் பிரச்சினையாகும். இதில் அத்தியவசியப் பிரச்சினைக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். ஒரே சமூகத்துக்குள், ஒரு பகுதியினர் அத்தியாவசிய தேவைகளை கோரும்போது அதனை தான் நிறைவேற்றி கொடுக்காமல் இருந்துவிட்டு, இன்னுமொரு பகுதியில் உள்ள மக்களின் ஆடம்பர பிரச்சினைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று மற்றவர் மீது குறை கூறுவது எந்தவகையில் நியாயமாகும்?
அம்பாறை மாவட்ட மக்களுக்கு குறைபாடுகள் இருந்தால் அமைச்சர் என்ற வகையில் ரிசாத் பதியுதீன் அவர்கள் அந்த மக்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கலாம். அதன்பின்பு கடமைப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை குறைகூரியிருந்தால் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் மக்களின் குறைகளை தீர்த்து வைக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை மட்டும் இலக்குவைத்து குறைகூறுவதன் மூலம் அமைச்சர் ரிசாத்தின் உள்நோக்கம் என்ன என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.
அதாவது மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பதல்ல இவரது நோக்கம். மாறாக வன்னி மாவட்ட அப்பாவி அகதி மக்கள் மீது அரசியல் சவாரி செய்வது போன்று, பிரச்சனைகளை சொல்லி சொல்லி இங்குள்ள மக்களின் வாக்குகளை புடுங்குவதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கினை உடைத்து தனது அரசியலை அம்பாறை மாவட்டத்தில் வளர்த்துக்கொள்ளவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் முற்படுகின்றார் என்பது புலனாகின்றது.
அம்பாறை மாவட்ட மக்களின் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை, அமைச்சரின் சொந்த மாவட்டமான வன்னி மாவட்ட மக்களின் வாழ்வாதார குறைபாடுகளுடன் ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்குமிடையிலுள்ள வித்தியாசங்கள் காணப்படுகின்றது. அம்பாறை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வன்னி மக்களுக்கு ஒன்பது பிரச்சினைகள் உள்ளன என்பது அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு தெரியாமளல்ல.
199௦ ஆம் ஆண்டு அகதிகளாக்கப்பட்ட வடமாகான முஸ்லிம்கள், இருபத்தியாறு வருடங்களை கடந்தும் இன்றும் அதே அகதி வாழ்க்கையினையே வாழ்ந்து வருகின்றார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் மேடைகளில் தானும் அகதியாக சொப்பின் பேக்குடன் புத்தளத்துக்கு வந்ததாக கூறித்திரியும் அமைச்சர் ரிசாத் அவர்கள், தன்னைப்போன்று கோடிஸ்வரர்களாக வன்னி மக்களை உயர்த்தாவிட்டாலும் பருவாயில்லை. அகதி எனும் அந்தஸ்திலிருந்து விலக்கிஇ தங்களது சொந்த இடங்களிலாவது வாழ்வதற்கு ஒரு வழிவகைகளை வன்னி மக்களுக்கு ஏற்படுத்தாமைக்கு அமைச்சரை யார் கண்டிப்பது?
தமிழ் - முஸ்லிம் இனப்பிரச்சினை நடைபெற்ற காலப்பகுதிகளிலும், 2௦௦4 ஆம் ஆண்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோதும் இடம்பெயர்ந்த அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பின்பு அவர்களது சொந்த மற்றும் வேறு இடங்களிலும் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் தற்பொழுது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் அகதிகளாக வாழ்க்கை நடாத்தவில்லை. இம்மாவட்ட மக்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆடம்பரப்பிரச்சினைகளாகும்.
ஆனால் வன்னி மாவட்ட மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டது. அதாவது தாங்கள் அகதிகளாக்கப்பட்டு முகவரிகள் அற்ற நிலையில் சொந்த இடங்களைவிட்டு வெளியேறி நீண்ட காலங்களாக அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும். இது அம்மக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசிய பிரச்சினைகளாகும்.
ராஜபக்சவின் குடும்பத்தினர்களுடன் தேனிலவு கொண்டாடிய காலத்தில் மீள் குடியேற்ற அமைச்சராக முழு அதிகாரங்களுடன் ரிசாத் பதியுதீன் அவர்கள் வலம்வந்தார். அப்படியிருந்தும் வன்னி முஸ்லிம்களை தங்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்த படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இக்குற்றச்சாட்டுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவித பதில்களும் இன்னும் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் முன்வைக்கப்படவில்லை. மாறாக அரசியல்வாதி என்றவகையில் சமாளித்தே வருகின்றார்.
முஸ்லிம் மக்களின் மனங்களிலிருந்து முஸ்லிம் காங்கிரசை துடைத்தெறியும் நோக்குடன் பேரினவாதிகளுடன் சேர்ந்துகொண்டு எந்தவித அபிவிருத்திகளும் செய்யவிடாமல் தடுத்திருந்தார். ஆனாலும் முஸ்லிம் காங்கிரசை அழிக்க அவரால் முடியவில்லை. கடந்த கால மகிந்தவின் ஆட்சி போலல்லாது இன்றைய நல்லாட்சியில் ஏராளமான அபிவிருத்திப் பணிகள் முஸ்லிம் காங்கிரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை சகித்துக்கொள்ள முடியாமல் கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்ற அதே பல்லவியை தொடர்ந்தும் அமைச்சர் ரிசாத் பாடிவருவதானது அவர் உளரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதனை காட்டுகின்றது.
முஸ்லிம் காங்கிரசினதும், அதன் தலைவர் ஹக்கீமினதும் தயவினால் அரசியல் வாழ்வளிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றார். பின்பு அமைச்சர் என்ற இலக்கை அடைந்தார். அத்துடன் கட்சி தலைவர் என்ற அரியாசனத்திலும் அமர்ந்து தனது அரசியல் வாழ்வில் குறுகிய வயதுக்குள் அதி உச்சத்தை அடைந்துள்ளார். அப்படி அடைந்தும் அடுத்த இலக்காக, இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை என்ற கவலை அமைச்சர் ரிசாத்திடம் காணப்படுகின்றது.
இந்த தேசிய தலைவர் என்ற அந்தஸ்த்தினை அடைவதற்காக அவரது பணத்துக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்ற ஊடகங்களுக்கும்இ அடியாட்களுக்கும் பணத்தினையும், பதவிகளையும் வழங்கி எவ்வளவோ முயற்சி செய்தும் இறுதியில் மக்கள் முன்பு அது எடுபடவில்லை.
எனவேதான் தன்னை ஒரு தேசிய தலைவராக மகுடம் சூட்டிக்கொள்ள தனது அனைத்து பித்தனாக்களையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் அரங்கேற்றி வருகின்றார்.
இதனாலேயே தனது வன்னி முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தி தீர்த்து வைப்பதனை மறந்துவிட்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் ஆடம்பரப் பிரச்சினைகள் மீது அக்கறை காட்டுவதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.
