பி. முஹாஜிரீன்-
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச முன்பள்ளிப் பாலர் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை (28) பி.ப. 2.30 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண பாலர் பாடசாலைகள் பணியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலைகள் பணியக செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம். சுபையிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி, தொழிநுட்பக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரீப் சம்சுடீன், கே.எம். றஸ்ஸாக், ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் பணியகத்தின் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் உட்பட பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த பாலர் பாடசாலைகளில் கடமையாற்றும், தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவு தலா மூவாயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.