அட்டாளைச்சேனையில் அமைச்சர் றிசாட் சூழுரை...!

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
னைத்து முஸ்லிம் கட்சிகளினதும் ஆதரவுடனான முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை உள்ளடக்கிய சிறந்தவொரு தீர்வுத் திட்டத்தை விரைவில் அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம். இந்த விடயத்தில் அரசு நன்றியுடன் செயற்படுமெனவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்' என்று அமைச்சர் றிசாட் பதியுதீன் அட்டாளைச்சேனையில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரு வருட தையல் பயிற்சியை முடித்துக் கொண்ட யுவதிகளுக்கு டிப்ளோமா சான்றிதளும், தையல் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு கடந்த (05) அட்டாளைச்சேனை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அட்டாளைச்சேனை அமைப்பாளர் கலாநிதி எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, டிப்ளோமா சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எஸ்.எஸ்.பி.மஜீட், முன்னாள் நீதிபதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எல்.அப்துல் கபூர், சிரேஷ்ட அறிவிப்பாளரும்,கல்விமானுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் இங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

'மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதன் மூலம் ஞானசார தேரரினால் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து இந்தச் சமூதாயத்தைப் பாதுகாக்கத்தான் மைத்திரிபாலவுக்கு நாங்கள் வாக்களித்தோம். மைத்திரிபால சிறிசேன வெல்ல வேண்டும் என்று நோன்பு பிடித்தோம், துவாச் செய்தோம்,துன்பப்பட்டோம். ஆனால் இந்த அரசு இன்று நாங்கள் கேட்காத இரண்டு வியங்களை நாட்டிலே முன்னெடுக்க இருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் சகோதரர் றவூப் ஹக்கீமை நான் சந்தித்துச் சொன்னேன்.

'நமது சமூகத்தின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு நாங்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பேசி ஒரு தீர்வை முன்வைப்போம்' என்றோம். அதற்கு ஹக்கீம் சொன்னார் 'உங்களோடு நாங்கள் சேரமாட்டோம். உங்கள் கட்சியை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை' என்றார். இதற்கான பதிலை விரைவில் இந்தச் சமூகம் அவருக்குச் சொல்லும்.

சகோதரர் றவூப் ஹக்கீம் எமக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, இந்த நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளினதும் பிரதிநிதிகள், முஸ்லிம் கல்விமான்கள், புத்திஜீவிகள் அன்னை பேரியல், அதாஉல்லா, ஹிஸ்புல்லா, சேகு இஸ்ஸதீன் போன்ற அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளையும் அழைத்து அவர்களது ஆலோசனை முன்மொழிவுகளைப் பெற்று சிறந்தவொரு தீர்வுத் திட்டத்தை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் அரசிடம் முன் வைக்கவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்' எனத் தெரிவித்தார்.

இதில் சிரேஷ்ட அறிவிப்பாளரும், கல்விமானுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி உரையாற்றுகையில்:-

இன்று அம்பாரை மாவட்ட மக்கள் உண்மையை அறிந்து கொண்டதன் விளைவால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் அலையலையாய்த் திரண்டு வந்த வண்ணமுள்ளனர். அதில் நானும் ஒருவன். பெருந்தலைவர் அஷ்ரப் நமது சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக அன்று பெருந் தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று, ஹக்கீம் தலைமையில் தனி நபர் அபிலாசைகளை வெல்லும் நோக்கில் வேறு திசைநோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

இந்தத் தருணத்தில் நமது மக்களைப் பாதுகாக்கவே அமைச்சர் றிஷாட் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொங்கி வரும் புதுவெள்ளமாகப் புறப்பட்டு வந்துள்ளது. நிச்சயம் இது நமது மக்களின் அபிலாசைகளை வெல்லும்'எனத் தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -