கொழும்பு - கொம்பனித் தெருவில் அமைந்துள்ள புகையிரத அடுக்கு மாடித் தொகுதியின் மின்னுயர்த்தியில் (லிப்ட்) யுவதி ஒருவர் சுமார் 45 நிமிடங்களாக மாட்டிக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கொழும்பில் இன்று ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையின் போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாகவும், 45 நிமிட போராட்டத்திற்குப் பின் இராணுவத்தினரால் குறித்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புகையிரத அடுக்கு மாடித் தொகுதியின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே வருவதற்காக குறித்த யுவதி மின்னுயர்த்தியை(லிப்ட்) பயன்படுத்தியுள்ளார்.
இதன் போது மின் தடை ஏற்பட்டதால் குறித்த யுவதி மின்னுயர்த்தியின் (லிப்டின்) உள்ளே இருந்து வெளிவர முடியாது தவித்துள்ளார்.
பின்னர் தொலைபேசியில் இருந்து தனது தாயாருக்கு குறித்த விடயத்தை தெரிவித்த பின்னர் தாயார் பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தகவலறிந்து 5 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர், உயர் அழுத்த ஹட்ராலிக் உபகரணத்தின் உதவியுடன் 45 நிமிட போராட்டத்தின் பின் மின்னுயர்த்தியை (லிப்டை) உடைத்து குறித்த யுவதியை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.